பணிச்சுமை அதிகரிப்பால் பரிதவிப்பு: சுகாதார செவிலியர்கள் கலெக்டரிடம் முறையீடு

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம சுகாதார செவிலியர்கள்
'அய்யா பணிச்சுமை எங்களால் தாங்க முடியவில்லை... எங்களுக்கு உதவி செய்து காப்பாற்றுங்கள்' என தேனி மாவட்ட கிராம சுகாதார செவிலியர்கள் கலெக்டர் முரளீதரனை நள்ளிரவில் சந்தித்து கண்ணீர் விட்டு முறையீடு செய்தனர்.
தேனி கலெக்டர் முரளீதரன், பொதுமக்கள் நலனில் அக்கரை காட்டுவது போல், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் நலனிலும் அக்கரை காட்டி செயல்பட்டு வருகிறார். இதனால் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அடிக்கடி கலெக்டர் முரளீதரனை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவில் தேனி மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் கலெக்டர் முரளீதரனை சந்தித்து முறையிட்டனர். முறையிட்டனர் என்பதை விட 'கண்ணீர் விட்டு கதறினர்' என்பதே பொறுத்தமான வார்த்தையாக இருக்கும்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கிராம சுகாதார செவிலியர்களுக்கு நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்களில் கூட எங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது இல்லை. விடுமுறை இன்றி நாங்கள் பல மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். மக்கள் தொகை எண்ணிக்கைக்கும், கிராம சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கைகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. கிராம சுகாதார செவிலியர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணிச்சுமை மிக, மிக அதிகமாக உள்ளது.
வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாய்- சேய் நலப்பணிகளை கவனிப்போம். கொரோனா டூட்டி போட்டதில் இருந்து, தாய்-சேய் நலப்பணிகளை கவனிக்க நேரம் இல்லை. எனவே இந்த இரண்டு நாட்களாவது எங்களது வழக்கமான பணிகளை கவனிக்க கொரோனா டூட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 'அய்யா பணிச்சுமை தாங்க முடியல... எங்களை காப்பாத்துங்க...' கலெக்டரிடம் கண்ணீர் விட்ட கிராம சுகாதார செவிலியர்கள்.
தமிழக முதல்வரின் மக்களை தேடி மருத்துவம் என்பது மகத்தான திட்டம். இந்த வேலையையும் எங்களையே செய்ய சொல்கின்றனர். இதற்கென தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வளவு இடையூறுகளை இவர்களே ஏற்படுத்திவிட்டு, தாய், சிசு மரணம் ஏற்பட்டால் கிராம சுகாதார செவிலியர்களே காரணம் என எங்களுக்கு குற்ற குறிப்பானை வழங்குகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்.
கிராமங்களில் நாங்கள் குடியிருக்க நல்ல கட்டடம் கூட இல்லை. ஒழுகும், எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். பல கட்டங்களில் மின்வசதி கூட இல்லை. பாம்பு, பூராண்களுக்கு மத்தியில் இருட்டில் வாழ்கிறோம். கலெக்டரிடம் எங்கள் குறைகளை சொல்லி கண்ணீர் விட்டோம். அவர் எங்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி உள்ளார் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu