செல்வாக்கை பயன்படுத்திய காங்கிரஸ்: தேனி திமுகவினர் பரிதவிப்பு

செல்வாக்கை பயன்படுத்திய காங்கிரஸ்: தேனி திமுகவினர் பரிதவிப்பு
X

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தேனி மாவட்ட காங்., கட்சி நிர்வாகிகள். உடன் முன்னாள் எம்.பி., ஆருண்.

தேனி காங்., மேலிட செல்வாக்கு மூலம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியதை தி.மு.க.வினர் மனதளவில் ஏற்க முடியாமல் பரிதவிப்பு.

தேனி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., 19 இடங்களையும், கூட்டணி கட்சியான காங்., 2 இடங்களையும் மட்டுமே பெற்றது. இதில் ஒரு இடம் 22வது வார்டு கவுன்சிலர் ஆர்.சற்குணம். இவர்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிகுந்த குடும்பம். இக்குடும்பத்தில் தற்போது மூன்றாவது தலைமுறை அரசியலுக்கு வந்துள்ளது.

இக்குடும்பத்தின் முதல் தலைமுறை என்.ஆர்.தியாகராஜன் காமராஜர் காலத்து அரசியல்வாதி. தேச விடுதலைக்காக ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தியாகராஜன். மதுரை ஜில்லா போர்டு பிரசிடெண்ட், தேனி எம்.எல்.ஏ., சட்டசபை எதிர்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்தவர். இவரது மகன் ராஜ்குமார் ஒரு டாக்டர். இருப்பினும் காங்., கட்சி சார்பில் பல முறை தேர்தலில் நின்று தோல்வியடைந்துள்ளார்.

இவரது மகன் தியாகராஜன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். தேனியில் என்.ஆர்.டி., மருத்துவமனை நடத்தி வருகிறார். தற்போது கூட ஐ.எம்.ஏ.,வின் தமிழக பொதுச்செயலாளராக உள்ளார். தமிழக மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார். இன்னும் பல பதவிகளில் உள்ளார். இவரது தாய் தான் சற்குணம். இவர் 22வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிந்ததும் தி.மு.க.,வினர் கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு மூணாறு, கொடைக்கானல், திண்டுக்கல், சிறுமலை என உல்லாச சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் தியாகராஜன் தேனி மாவட்ட காங்., தலைவரை அழைத்துக் கொண்டு சென்னை சென்று தேனி தொகுதியின் முன்னாள் எம்.பி., ஆருண், அவரது மகன் ஹசன் ஆருண் ஆகியோருடன் சென்று நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தேனி நகராட்சி தலைவர் பதவி்க்கு கூட்டணியில் ஒதுக்கீடு பெற்று விட்டார். இதற்கிடையில் ராகுல் காந்தியின் அழுத்தமும் தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., தான் என முடிவு செய்து விட்டது. தமிழக காங்., மேலிடமும் தேனி நகராட்சி தலைவர் வேட்பாளர் சற்குணம் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டது.

தற்போது உள்ளூர் தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சீட் வாங்கினாலும் நாளை தேர்தல் முடியும் வரை திரிசங்கு நிலை நீடிப்பதால் என்.ஆர்.டி., குடும்பமும் மிகுந்த டென்சனில் உள்ளது என காங்., கட்சியினரே வெளிப்படையாக தெரிவித்தனர்.

Tags

Next Story