தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,- காங்., குழப்பம்..!?

தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,-  காங்., குழப்பம்..!?
X

தேனி தொகுதியில் திமுக, காங்கிரஸ் இடையே குழப்பநிலை (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதியில் களம் இறங்குவது யார் என்பதில் தி.மு.க., கூட்டணியில் பெரிய குழப்பம் நிலவுகிறது.

தேனி லோக்சபா தொகுதியினை தி.மு.க., எப்போதும் கூட்டணி கட்சியான காங்.,க்குக்கு தான் வழங்கும். இந்த முறை காங்., இந்த தொகுதி வேண்டாம் என மல்லுக்கட்டி நிற்கிறது. காரணம் தினகரன் என்ற அரசியல் யானை பா.ஜ.க., கூட்டணி சார்பில் களம் இறங்குகிறார். தினகரனை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான வேட்பாளர் காங்., கட்சியில் இல்லை என்பதே முழுமையான உண்மை. காங்., கட்சியில் போட்டியிட முன்வந்த பலரும் தினகரன் எதிர் வேட்பாளர் என்பதை அறிந்து சற்று நிதானம் காக்கின்றனர்.

அதனால் தி.மு.க., தனது கட்சி மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. உண்மையில் தங்க.தமிழ்செல்வன் மிகவும் வலுவான வேட்பாளர் தான். ஆனால் உள்கட்சி கோஷ்டி பூசலில் அவர் சிக்கியிருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள தி.மு.க., வி.வி.ஐ.பி.,க்கள் பலர் தங்க.தமிழ்செல்வன் வேண்டாம் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு தி.மு.க., வி.வி.ஐ.பி.,க்கள் நேரடியாக அறிவாலயம் சென்னை தலைமையை சந்தித்து தங்க.தமிழ்செல்வனுக்கு சீட் தராதீர்கள்.

அவர் நின்றால் வெற்றி பெறுவது சிரமம் என கூறியுள்ளனர். உண்மையில் தினகரனுக்கு எதிராக போராடும் அளவுக்கு தங்க.தமிழ்செல்வனிடம் பொருளாதார வல்லமை கிடையாது. மற்றபடி கட்சி பலம், ஆள் பலம் எல்லாம் உண்டு. இதனால் தங்க.தமிழ்செல்வன் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் மிகவும் நிதானத்துடன் எந்த வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்த தயாராகத்தான் இருக்கிறார்.

அதேசயம் அந்த இரண்டு வி.ஐ.பி.,க்களும் தி.மு.க.,வே நேரடியாக தேனி தொகுதியில் களம் இறங்கட்டும், முன்னாள் காங்., எம்.பி., ஆருண் மகன், இம்ரானை களம் இறக்குங்கள். இம்ரான் இப்போது தி.மு.க.,வில் கட்சி பொறுப்பில் உள்ளார். நாங்கள் எல்லோரும் வேலை பார்த்து அவரை வெற்றி பெற வைக்கிறோம்.

தினகரனுடன் மோதுவதற்கு சரியான நபர் அவர் மட்டுமே. காரணம் பொருளாதார பலம், ஆள் பலம், கூட்டணி பலம் என அனைத்திலும் தினகரனுக்கு சரிநிகரானவர் இம்ரான் தான் என அவர்கள் மேலிடத்திடம் கூறியுள்ளனர். இந்த கருத்துக்களை கேட்ட மேலிடம் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தினகரனுக்கு எதிராக இம்ரான் களம் இறங்கினாலும், தங்க.தமிழ்செல்வன் களம் இறங்கினாலும் போட்டி வலுவாகவே இருக்கும். அரசியல் களம் அனல்பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags

Next Story