எடப்பாடியை உலுக்கி எடுத்த ஆறு பேர்..! கழகத்தில் கலகக் குரல்கள்..!
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்ததால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக; அவர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கலகக்குரல் எழும். அந்தக் குரல் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று பலமுறை சொல்லி வந்தேன்.
நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.
தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல… பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை… இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்… இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை… பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்… இனியும் தாமதிக்கக் கூடாது… இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள்.
எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க… வாதங்கள் தடித்து… முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும்.
அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்.
நாரதர் கலகம் மட்டுமல்ல… ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்… முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்.
தகவல் உதவி: எஸ்.பி.லட்சுமணன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu