வாழ்க்கையின் வெற்றிக்குக் கல்லூரிப் படிப்பு மட்டும் போதாது!

வாழ்க்கையின் வெற்றிக்குக் கல்லூரிப் படிப்பு மட்டும் போதாது!
X

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையும் தேனித் தமிழ்ச் சங்கமும் கலை, இலக்கியம் உள்ளிட்ட நிகழ்வுகளை இணைந்து செய்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற கல்லுாரி படிப்பு மட்டும் போதாது என எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசினார்.

இணையம், செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு புதியத் தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்றபடி நம் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் வாழ்க்கையின் வெற்றிக்குக் கல்லூரிப் படிப்பு மட்டும் போதாது, என்று எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தெரிவித்தார்.

கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற ‘இதழியல் பயிலரங்கம்’ நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் அருள் தந்தை ம. அன்பரசு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி கலந்து கொண்டு, ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார். அப்போது அவர் பேசும் போது, பண்டையக் காலத்தில் முக்கியச் செய்திகள் அனைத்தும் ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடுகள் வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. தெருக்கூத்துகள், நாடகங்கள், நாட்டுப்புறப்பாடல்கள் போன்ற பல வடிவங்களில் மக்களுக்குத் தேவையான செய்திகள் கொண்டு சேர்க்கப்பட்டன. முரசு, பறை, பேரிகை, தமுக்கு போன்ற இசைக்கருவிகளை முழக்கிப் பல அவசரச் செய்திகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அச்சு இயந்திரங்கள் வந்த பின்பு செய்திகள் உடனுக்குடன் அச்சிட்டுப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அறிவியல் வளர்ச்சியைத் தொடர்ந்து, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று செய்தித்தொடர்பும் பல்வேறு ஊடகங்களின் வழியாக வளர்ச்சியைப் பெற்றது.

தற்போது, இணையத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு, தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தும் எளிமையாக்கப்பட்டு விட்டன. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. இணையத்தில் செய்திகள் மட்டுமின்றி, மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் எழுத்து, ஒலி, காணொளி என்று பல வடிவங்களில் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன. இதன் வழியாக, நமக்குத் தேவையான எதையும் அறிந்து கொள்வது மட்டுமின்றி, அதை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும் முடியும். இணையத்தைத் தொடர்ந்து, தற்போது செயற்கை நுண்ணறிவு என்கிற புதியத் தொழில்நுட்பம் வந்து விட்டது. வருங்காலம் என்பது தொழில்நுட்பங்கள் நிறைந்ததாகவும், போட்டிகள் மிகுந்ததாகவும் இருக்கும். அதில் நாம் வெற்றியைப் பெறுவது என்பது எளிதானதல்ல. கல்லூரிப் படிப்புடன் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் இணையம் வழியாகக் கற்றுக் கொண்டு நம் திறன்களை நாமாகவே வளர்த்துக் கொள்ள முன் வர வேண்டும்” என்றார். அவரைத் தொடர்ந்து, தொலைக்காட்சிச் செய்தியாளர் இரா. சிவக்குமார் செய்திகள் சேகரிப்பது குறித்துப் பயிற்சியளித்தார்.

இப்பயிலரங்க நிகழ்வின் போது, கல்லூரியின் தமிழ்த்துறைக்கும் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அநிதம் அமைப்புகளுக்கிடையே, கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. கல்லூரியின் அதிபர் அருள் தந்தை ஜான் பிரகாசம், செயலாளர் அருள் தந்தை அ. அந்தோணிசாமி, பேராசிரியர் அ. காமாட்சி, பொறியாளர் சு. சி. பொன்முடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, உதவிப் பேராசிரியர் சு. கணேஷ் வரவேற்புரையாற்றினார். முடிவில், உதவிப்பேராசிரியர் ப. மகேஸ்வரி நன்றி தெரிவித்தார். கல்லூரியின் தமிழ் மன்றச் செயலாளர் க. தினேஷ்குமார் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..