பருவநிலை மாற்றத்தால் இந்தியாவிற்கே அதிக பாதிப்பு..!
தேனி மாவட்டம் வைகை வனவியல் கல்லுாரியில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலெக்டர் ஷஜீவனா பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
காலநிலை மாற்றம் குறித்து அரசு அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் தேனி கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி கூட்டரங்கில், நடந்த இந்த காலநிலை நெருக்கடி மிகவும் பரவலாகவும் கடுமையாகவும் மாறிவருவதால் காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களை உருவாக்கியுள்ளார். இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அனைத்து துறை அலுவலருக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இப்பயிலரங்கில் கலெக்டர் பேசியதாவது:
பூமி வெப்பமடைதல், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் காற்று ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தற்பொழுது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நோயின் தாக்கம் மிக குறைவாக இருந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு, சுற்றுச்சூழக்கும், சமூகத்திற்கும் உகந்த வகையில், தங்கள் வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உலக அளவில், மாசுபாட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 35 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் மாசுபாட்டினால் பாதிப்படையும். இதனை தவிர்க்க நாம் அனைவரும் இன்று முதலே மாசுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் நீர்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. மீன்கள், ஆமைகள் போன்றவற்றின் அழிவிற்கு நானோ பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக உள்ளது. பூமியில் உயிரினங்கள் நீடித்து வாழ பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை உபயோகிப்பதை பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும், அதன்விளைவுகளை தடுக்கவும் வருங்கால சந்ததியினருக்கு ஒரு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற இயக்கங்கள் செயல்படுகிறது.
சுற்றுசூழல் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பருவநிலை மாற்றத்தைத் தணிக்க ஒவ்வொரு துறையும் தங்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
எனவே, இப்பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொரு அலுவலர்களும் மாசுபாட்டினை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இன்று முதல் ஈடுபட வேண்டும் என பேசினார்.
அதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, மாவட்டத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பாதிப்பு, பசுமை தமிழ்நாட்டின் பங்கு, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் ஈரநிலத்தின் பங்கு, ஒரு ஆரோக்கியம் ஒரு இணைப்பு, விலங்குகளிடம் காலநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை முறையில் வேளாண்மையில் கார்பன் தடம் குறைத்தல், மாவட்ட காலநிலை மாற்ற செயல் திட்டம் மற்றும் மாநில உரிமையாளர்கள் ஆலோசனை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் வல்லுனர்கள் பேசினர்.
இப்பயிலரங்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆனந்த் , மாவட்ட வன அலுவலர் சமர்தா, துணை இயக்குநர் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை) மணீஸ் மீனா, உதவி வனப் பாதுகாவலர்(பயிற்சி) விவேக், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரதிநிதி லோகேஷ், அரசு அலுவலர்கள், வனப்பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu