துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
தூய்மை பணியாளர் (கோப்பு படம்)
எங்கள் தெருவில் குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளருக்கு 55+ வயதிருக்கும். புடவைக்கு மேல் சீருடை அணிந்து குப்பையை கைகளால் பிரித்துக் கொண்டிருப்பார். நான் எப்போதேனும் குப்பை போடச் செல்லும் போது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். ஒரு முறை அமெரிக்காவில் பணிபுரியும் என் சகோதரிக்கு அம்மை போட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை, தேவையான இயற்கை மருத்துவம் இவற்றுடன் இறைவழிபாட்டையும் விடவில்லை.
கூடுதலாக அந்த தூய்மைப் பணியாளருக்கு ஒரு புது புடவையும், ஒரு நாள் மூன்று வேளை சாப்பாட்டுக்கு பணமும் வெற்றிலை பாக்குடன் வைத்துக்கொடுத்தோம். முதலில் வாங்கவே இல்லை. ஆனால் காரணம் சொன்னவுடன் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.‘உங்க தங்கச்சிய நான் பார்க்க முடியுமா’ என வெள்ளந்தியாகக் கேட்டார். போனில் புகைப்படம் காண்பித்தேன். ‘அவங்களுக்கு சரியான பிறகு சொல்லுங்கள்’ என கேட்டுக்கொண்டார். என் சகோதரிக்கு பூரண குணம் ஆன பிறகு அவரிடம் மறக்காமல் தகவல் சொன்னேன்.
‘சரிம்மா, நல்லது அந்த மாரியாத்தா நல்லது தான் செய்வா’ என சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினரானார். இரண்டு நாட்கள் கழித்து பைக்கில் அந்த வழியாகச் செல்லும் போது அவரை கவனித்தேன். சட்டென அடையாளம் தெரியவில்லை. தலைக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தார். நான் பைக்கை நிறுத்தி ‘என்ன வெயிலுக்காகவா’ என விசாரித்தேன்.
‘இல்லம்மா, உங்க தங்கச்சிக்காகத்தான். மாரியம்மனுக்கு வேண்டிக்கிட்டேன்’ என சொன்ன போது எனக்குள் சர்வமும் ஒடுங்கியது. நாம் தான் கருணையோடு இருக்கிறோம் என நினைத்து சின்ன பெருமிதத்துடன் நடந்து கொள்ளும்போது ‘நான் அதைவிட கருணையுடன் இருப்பேன்’ என மிகவும் இயல்பாக நம்மைக் கடந்து செல்லும் அன்புள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் இந்த பூமி இயங்கிக்கொண்டிருக்கிறது.
நாம் ஒரு துளி கருணையைக் காண்பித்தால்போதும், இந்த பிரபஞ்சம் கடலளவு கருணையை நமக்காகக் கொட்டிக் கொடுக்க காத்திருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu