ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?: போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்

ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?:  போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்
X

போட்டி தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வகளுக்கு மாணவ, மாணவிகள் படிக்க வசதியாக சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் திறக்கப்பட்டுள்ள நுாலகம்.

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்.,தேர்வு மட்டுமல்ல. அத்தனை அரசு தேர்வுகளுக்கும் சின்னமனூர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூர் காவல் நிலையம் சற்று விரிவான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆய்வாளராக பணிபுரியும் சேகர், பொதுமக்களுடன் மிகுந்த நட்புறவு பாராட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் தொடர்பில் உள்ள அத்தனை சங்கங்களும் காவல்துறையினர் சொல்வதை கேட்டு செயல்படுகின்றனர்.

ஆய்வாளர் சேகர் அறிவுரைப்படி காவல் நிலையத்தை ஒரு பூங்கா போல் மாற்றி அமைத்து விட்டனர். எங்கு பார்த்தாலும் செடிகளும், பசுமையும் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தனியாக மின்விசிறி வசதியுடன் காத்திருப்பு அறை கட்டுப்பட்டள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதெல்லாம் விட ஒரு படி மேலே போய் அழகிய நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுாலகத்தில் அரசின் அத்தனை நுழைவுத்தேர்வுகளுக்கும், போட்டித்தேர்வுகளுக்கும் படிக்க தேவையான புத்தகங்கள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கும் இங்கே படிக்கலாம் என்றால் எவ்வளவு வசதிகள் இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்களேன்.

இங்குள்ள நுாலகத்தின் சாவி, காவல் நிலைய எழுத்தரிடம் தான் இருக்கும். எனவே நுாலகம் திறந்திருக்கும் நேரம் மட்டுமின்றி, நுாலகம் மூடப்பட்ட இரவு வேளைகளில் கூட படிக்க விரும்புபவர்கள் (இரவில் படிக்கும் பழக்கம் உள்ளவர்களும் பலர் உள்ளனர்) காவல் நிலைய எழுத்தரிடம் சாவி வாங்கி நுாலகத்தில் அமர்ந்து படிக்கலாம்.

இங்கு அமர்ந்து படிக்க இருக்கை, மேசை, குறிப்பெடுக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அமர்ந்து படிக்கும் அறையில் போதுமான காற்றோட்ட வசதிகளும் செய்து, எந்த நேரமும் மாணவ, மாணவிகள் குளிர்ச்சியான சூழலில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story