முதல்வர் ஸ்டாலினும், அண்ணாமலையும் "கருணாநிதி- ஜெ.," இடத்தை நிரப்பி விட்டனரா?

முதல்வர் ஸ்டாலினும், அண்ணாமலையும் கருணாநிதி- ஜெ., இடத்தை நிரப்பி விட்டனரா?
X

முதல்வர் ஸ்டாலின்,  பாஜக தலைவர் அண்ணாமலை.

கருணாநிதி, ஜெ., இறந்த பின்னர், 'தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது' என சில நடிகர்களே பேசும் அளவுக்கு தமிழக அரசியல் களம் அனாதையாக இருந்தது.

ஆட்டுக்குட்டு அண்ணாமலை என்று தி.மு.க.,வினரால் கிண்டல் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அண்ணாமலை இன்று ஒட்டுமொத்தமாக தி.மு.க., அரசை துாங்க விடாமல் கலங்கடித்து வருகிறார். அண்ணாமலை பா.ஜ., தலைவர்களால் உருவாக்கப்பட்டவர் அல்ல.. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., தயாரிப்பு..அவரிடம் கவனமாக இருங்கள் என அரசியல் விமர்சர்கள் தி.மு.க.,வினரை தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அண்ணாமலை 30 சதவீதம் பாரதீய ஜனதாவை வளர்த்தால், தி.மு.க., 70 சதவீதம் உதவி செய்கிறது என்று கிண்டல் மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகின்றன.

தவிர ஐ.பி.எஸ்., அண்ணாமலை அறிமுகம் ஆகும் போது ஒரு கத்துக்குட்டியாக அறிமுகம் ஆனார். இன்று இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேராலும் கவனிக்கப்படும் ஒரு நபராக மாறி விட்டார். ஆமாம். தமிழக அரசியலில் அண்ணாமலை ஒரு புதுடிரெண்ட் எடுத்துள்ளார். ஜெயலலிதாவின் துணிச்சல், கருணாநிதியின் சாதுர்யம், எம்.ஜி.ஆரின் கவர்ச்சி., அண்ணாவின் புத்திசாலித்தனம், காமராஜரை போன்ற ஒரு அறிவுக்கூர்மை, சமூக அறிவு படைத்த ஒட்டுமொத்த உருவம் தான் அண்ணாமலை என பா.ஜ.,வினர் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்த புகழ்ச்சிக்கு தான் தகுதியானவர் என ஒவ்வொரு நொடியும் அண்ணாமலை நிரூபித்து வருகிறார். அதாவது சில மாதங்கள் முன்பு வரை அண்ணாமலையை ஒரு காமெடி பீசாகவே பார்த்து வந்த நிருபர்கள் கூட்டம், இன்று அண்ணாமலையை ஒரு அரசியல் கதாநாயகனாகவே கருதி, அவரது பிரஸ்மீட்டுக்காக காத்திருக்கின்றனர். காரணம் ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் ஏதாவது ஒரு ஏவுகணையினை எறிந்து அரசியல் களத்தை பதறடிக்கிறார் அண்ணாமலை.

வழக்கமாக பிரதமரும், முதல்வரும் மட்டுமே வெளிநாடு சென்று வரும் நிலையில், அண்ணாமலை இலங்கை பயணம் சென்று வந்தது அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பதினைந்தாயிரம் புத்தகம் படித்து மனப்பாடம் செய்துள்ளேன். எந்த குறிப்பும் எடுக்கமாட்டேன். எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும், எந்த சப்ஜெக்ட் தொடர்பாகவும் வாருங்கள் விவாதிக்கலாம் என அவர் விடுத்த பகிரங்க சவால்... தமிழக அரசியல் களத்தில் அத்தனை அரசியல் வி.ஐ.பி.,க்களையும் பின்வாங்க வைத்துள்ளது. குறிப்பாக இன்று பிரிண்டிங் மீடியாவாக இருக்கட்டும், விஷூவல் மீடியாவாக இருக்கட்டும், சமூக வலைதளங்களாக இருக்கட்டும் அண்ணாமலையே முதலிடம், தமிழக முதல்வருக்கு இரண்டாம் இடம் என்ற அளவு தகவல் தொடர்பு சாதனங்களை அண்ணாமலை ஆக்கிரமித்து விட்டார்.

மொத்தத்தில் அவரின் துணிச்சல், புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு, அணுகுமுறை, அதிரடி என அனைத்திலும் தான் ஒரு பெரும் அரசியல் தலைவர் என்பதை நிரூபித்து தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு மாற்று நான் தான் என்ற நிலையை உருவாக்கி விட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர்.

அடுத்தது ஸ்டாலின். தமிழக முதல்வரின் நிதானம், அரசியல் பக்குவம், பிரச்னைகளை கையாளும் விதம், மக்களை சந்திக்கும் விதம், அரசு நிர்வாகம், திட்டங்களை வடிவமைத்தல், உருவாக்குதல், மத்திய அரசிடம் இணக்கம் காட்டுதல், மோதல் ஏற்படுத்துதல் என அத்தனையிலும் தான் ஒரு புலிக்குட்டி (கருணாநிதியின் மகன்) என்பதை நொடிக்கு நொடி நிரூபித்து வருகிறார். உழைப்பில் தான் தனது தந்தைக்கு நிகரானவர் என்பதை அவரே பகிரங்கமாக கூறியிருக்கிறார். அவரது உழைப்பை பார்த்தவர்கள் இதுவரை அந்த கூற்றினை மறுக்கவில்லை. அதேபோல் அரசியல் சதுரங்கத்திலும் தனது அனுபவ முத்திரைகளை பதிக்க ஸ்டாலின் தவறியதே இல்லை. ஆக கருணாநிதியின் இடத்தை முதல்வர் ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

கருணாநிதி, ஜெ., இறந்த பின்னர், 'தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது' என சில நடிகர்களே பேசும் அளவுக்கு (அவர்கள் எல்லாம் இப்போது காமெடி பீசாகி விட்டனர்) தமிழக அரசியல் களம் அனாதையாக இருந்தது உண்மை தான். இப்போது ஜெ., இடத்தை அண்ணாமலையும், கருணாநிதி இடத்தை ஸ்டாலினும் நிரப்பி விட்டனர் என்பதை அரசியல் பார்வையாளர்களும், விமர்சகர்களுமே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.

தவிர ஸ்டாலினுக்கு அண்ணாமலை வைக்கும் செக். அதனை ஓவர்கம் செய்ய ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகள் என தமிழக அரசியல் களம் ஒரு பரபரப்பான சூழலுக்கு வந்துள்ளது. வரும் பார்லிமெண்ட் தேர்தலில் ஸ்டாலினா? அண்ணாமலையா? என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும். அப்ப அ.தி.மு.க., அதன் எதிர்காலம் பற்றி இப்போது கருத்துச் சொல்லவும் முடியாது. கணிக்கவும் முடியாது. காரணம் அ.தி.மு.க.,வின் தலைக்கு மேலே பல கத்திகள் தொங்கிக் கொண்டுள்ளது. இப்போது உள்ள இரட்டைத் தலைமையும் வலுவிழந்து உள்ளது. எனவே அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கணிக்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கணக்கு ஆகும்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா