சுருளி அருவியில் வரும் 27ம் தேதி முதல் சாரல் திருவிழா
சுருளிஅருவி பைல் படம்.
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் சுருளி சாரல் திருவிழா- 2023 வரும் 27.09.2023 முதல் 02.10.2023 வரை ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: சுருளி சாரல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிறப்பு பேருந்து, சாலை வசதி, வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்படவுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கவுள்ளது.
சுற்றுலா பயணிகளை உற்சாக படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சமூகநலத்துறை சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாக நடைபெறவுள்ளது.
விழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும், நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை உபயோகப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
சுருளி சாரல் திருவிழா நடைபெறும் நாட்களில் தேனி, உத்தமபாளையம் மற்றும் கம்பத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது, இவ்விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிட்டு செல்ல வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரக புலிகள் காப்பக துணை இயக்குநர், ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, சுற்றுலா அலுவலர் (பொ) பாஸ்கரன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu