ஜாதி மோதல் : சேட்டை மாணவர்களுக்கு 11 ஆயிரம் முறை 'இம்போசிசன்' விநோத தண்டனை
பைல் படம்
அரசு பள்ளியில் ஜாதி மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை அழைத்துச்சென்ற போலீசார், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 'அமைதி தரும் 11 வாக்கியங்களை அமைத்து கொடுத்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் தலா ஆயிரம் முறை வீதம் 11 ஆயிரம் இம்போசிசன் எழுதி தர வேண்டும்' என விநோத தண்டனை கொடுத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் ஜாதி மோதலில் ஈடுபட்டனர். இது கலவரமாக உருவாகி விடக்கூடாது என கருதிய பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து பள்ளியில் போலீஸை குவித்தார். மோதலில் இரு தரப்பிலும் தலா 10க்கும் மேற்பட்ட மாணவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். சமரச கூட்டம் போட்டு ஊர் மக்களிடம் பேசி, பிரச்னைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைத்தார்.
இது பற்றி பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் கூறியதாவது: தற்போது வாட்சாப், பேஸ்புக் வந்து விட்டதால், தனக்கு பிடிக்காத மாணவனை படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களும் பதிலடியில் இறங்குகின்றனர். இதனால் ஒரு சிறிய பிரச்னை ஒரு சில நொடிகளில் பெரும் ஜாதிக்கலவரமாக உருவெடுக்கிறது. மாணவர்கள் மோதல் என்பதை மிகவும் நுட்பமாக கையாண்டோம். இரு தரப்பிலும் சில மாணவர்களை பிடித்து வந்தோம். அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தால், அவர்களின் எதிர்காலம் பாழ்பட்டு விடும். அதேநேரம் அவர்களுக்கு அமைதியை போதிக்காமல் இருக்க முடியாது.
எனவே அமைதியை போதிக்கும் 11 வாசகங்களை நாங்களே தயார் செய்தோம். ஒவ்வொரு வாசகத்தையும் ஆயிரம் முறை எழுத வேண்டும். ஆக மொத்தம் ஒவ்வொரு மாணவரும் தலா 11 ஆயிரம் முறை இம்போசிசன் எழுத வேண்டும் என நாங்கள் மாணவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளோம். அவர்கள் இம்போசிஷன் எழுதிய பின்னர், அவர்களை எச்சரித்து, அறிவுரை சொல்லி மீண்டும் வகுப்புகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். எங்களின் இந்த முடிவுக்கு கிராம மக்கள், பள்ளி நிர்வாகம் முழு ஆதரவு கொடுத்துள்ளது. மாணவர்களை திருத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu