வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
தேனி கே.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் சுந்தரம், 65. கூட்டுறவு சங்கத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தேனி பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். எஸ்.பி.ஐ. இணையதளத்தில் அப்டேட் செய்யுமாறு இவருக்கு ஒரு லிங்க் எஸ்.எம்.எஸ்., வந்தது. அந்த லிங்கை ஓப்பன் செய்த சுந்தரம், தனது விவரங்களை அப்டேட் செய்தார். ஓ.டி.பி., எண்ணை அப்டேட் செய்ததும், இவரது வங்கிக்கணக்கில் இருந்து இரண்டு தவணையாக 75 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதன் பின்னரே, சுந்தரம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். சைபர் கிரைம் உதவி எண் 1930ல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ. தாமரைக்கண்ணன் விசாரித்தனர். சுந்தரத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வேறொரு வங்கி கணக்கிற்கும், 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஆன்லைன் பரிவர்த்தனை ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு அந்த 50 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், இந்த பணத்தை சுந்தரத்திடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu