நீர் வரத்து ஓடையை வழிமறித்து கழிப்பறை கட்டும் முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு
பைல் படம்
தேனி மாவட்டம், கூடலுாரில் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி அருகே கூலிக்காரன் வாய்க்கால் செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் போது இந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தவிர இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு செல்ல, இந்த ஓடைப்பாதையினை மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்த நிலங்களில் விளையும் விளைபொருட்களும் இந்த பாதை வழியாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில் இந்த பாதையில் பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய இடத்தில் நகராட்சி நி்ர்வாகம் கழிப்பறை கட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், இந்த கழிப்பறையால் ஓடைப்பாதை மறைக்கப்படும். ஓடையில் வெள்ளம் வரும் போது, கழிப்பறையினை பயன்படுத்தவே முடியாது. பள்ளி காம்பவுண்ட் சுவரை ஒட்டி கட்டுவதால் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் துர்நாற்றத்தால் பெரும் சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.
இந்த கழிப்பறையினை இதே பகுதியில் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட பாரதீயகிஷான் சங்க தலைவர் எம்.சதீஷ்பாபு கூறுகையில், 'இந்த ஓடைப்பாதை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள பாதை ஆகும். இந்த பாதை பைபாஸ் ரோட்டையும், குமுளி மெயின் ரோட்டையும் இணைக்கிறது. விவசாயிகள் மட்டுமின்றி பக்தர்களும் இந்த பாதையினை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று வரவும் இந்த பாதை அதிகம் பயன்படுகிறது.
தற்போது துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கழிப்பறை கட்ட 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இந்த கழிப்பறை கட்டுவதன் மூலம் 25 லட்சம் ரூபாயினை நகராட்சி நிர்வாகம் வீணடிக்கிறது. தேனி கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மக்களுக்கு ஒதுக்கிய நிதியினை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அதேபோல் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் அரசு கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்க வேண்டும்.
கடந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்த போது, மூடைக்கு அறுபது ரூபாய் வரை அதிகாரிகள் கமிஷன் பெற்றனர். இது குறித்து கலெக்டர் முரளீதரனிடம் நேரடியாக புகார் செய்தோம். அதேபோல் நெல் கொள் முதல் மையங்களில் இடைத்தரகர்கள், வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதுவும் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கூடலுாரில் இருந்து காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகள், பால் போன்ற பொருட்கள் கேரளாவிற்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி விளைபொருட்களையும், பால் பொருட்களையும் கொண்டு செல்பவர்கள் மீது போலீசாரும், வனத்துறையினரும் தேவையில்லாத இடையூறு செய்கின்றனர். ஆனால் கனிமவளங்களை கடத்திச் செல்பவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இந்த விஷயத்திலும் கலெக்டர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu