ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் தேனியில் பூத்தது
தேனி வீடுகளில் பூத்த பிரம்மகமலம் பூ.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மிகுந்த வாசனை திறன் கொண்ட, அபூர்வமான பிரம்மகமலம் பூ இன்று தேனியில் பலரது வீடுகளில் பூத்துள்ளது.
பிரம்மனின் நாடிக்கொடி என அழைக்கப்படும் பிரம்மகமலம் பூக்கள் இமாலய மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும். கேரளாவிலும் இருக்கும். கேரளாவின் சீதோஷ்ண நிலை தேனியிலும் உள்ளது. எனவே தேனியில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது வீடுகளில் இந்த வகை பூக்களை தெய்வீகத்தன்மைக்காகவும், அழகு, நறுமணத்திற்காகவும் வளர்க்கின்றனர்.
இளவேனிற்காலத்தில் மட்டும் இப்பூக்கள் பூக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும். ஒரு செடியில் குறைந்தபட்சம் நாற்பது பூக்கள் வரை பூக்கும். ஓர்க்கிட் என வகையை சேர்ந்த இந்த பூக்கள் மலர்ந்த சில மணி நேரங்களிலேயே வாடி விடும். அந்த குறிப்பிட்ட சில மணி நேரங்கள் பூ பூத்த வீடு மட்டுமின்றி தெருவில் கூட பூவின் நறுமணத்தை உணர முடியும்.
இன்று அதிகாலை ஒரு மணிக்கு பொம்மையகவுண்டன்பட்டியில் இ.எஸ்., செந்தில்குமார் என்பவரது வீட்டில் இந்த மலர் பூத்தது. இதன் நறுமணத்தை உணர்ந்தவர்கள் உடனே எழுந்து பூவை போட்டோ எடுத்தனர். இதேபோல் மேலும் சிலரது வீடுகளிலும் இந்த பூக்கள் மலர்ந்தது.
இந்த பூ மலர்ந்த உடன் பார்த்தால் பூவின் நடுவில் பிரம்மா படுத்திருப்பது போலவும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போலவும் காணப்படும். பூ மலரும் நேரத்தில் நாம் மனதில் நினைத்து வேண்டுவது நடக்கும் என்ற நம்பிக்கை கேரள மக்களிடம் உள்ளது என செந்தில்குமார் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu