சுரைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீங்களா?: தொழில் போட்டியில் அசத்தல்

சுரைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீங்களா?: தொழில் போட்டியில் அசத்தல்

தேனி மாவட்டம், சின்னமனுாரில் தனியார் ஓட்டலுடன் இணைந்த ஒரு டீக்கடையில் சுரைக்காயில் பஜ்ஜி போடும் மாஸ்டர்.

வாழைக்காய் பஜ்ஜியை விரும்பாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. இப்போது விதவிதமான பஜ்ஜிகள் உருவாகி வருகின்றன.

தமிழகத்தின் வேலையை வடமாநிலத்துக்காரன் ஆக்கிரமித்து வருகிறான் என அலறும் பலரும், கவனிக்காத ஒரு விஷயம் அரங்கேறி வருகிறது. மலையாள சேட்டன்கள் தமிழக வணிகத்தை கைப்பற்றி வருகின்றனர். தமிழகத்தில் உணவு வணிகத்தில் அவர்கள் பெரும் அளவில் முதலீடுகளை குவித்து வருகின்றனர்.

சேட்டன்கள் முதலில் டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளை தான் குறி வைத்தனர். தேனி மாவட்டத்தில் ‘மளமள’வென மலையாளிகள் நடத்தும் டீக்கடைகள் அதிகரித்து வருகின்றன. இங்கு வழங்கப்படும் முட்டை மற்றும் பிரெட் உணவுகள், டீ, காபி, ஐஸ்கிரீம், பல்வேறு வகை பழ ஜூஸ்கள் தமிழர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது. என்ன தான் தமிழக மாஸ்டர்கள் உருண்டு புரண்டாலும் கேரள ஸ்டைல் முட்டை மற்றும் பிரெட் உணவுகளை அடித்துக் கொள்ளவே முடியாது.


அடுத்து அவர்களின் அசுரத்தனமான உழைப்பு. இது தான் சரியான வார்த்தை. அசுரத்தனமான உழைப்பு. மது, சிகரெட், புகையிலை உட்பட எந்த போதைப்பழக்கமும் இல்லை. ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. படித்து விட்டோம் (ஆமாம் அனைவரும் படித்தவர்கள்) என தலைக்கணமும் இல்லை. அதிகம் படித்தவர்களிடம் இருக்கும் பண்பும், நாகரீகமும் அவர்களிடம் இயல்பாகவே உண்டு. தவிர அவர்கள் வழங்கும் டீ, காபி, வழங்கப்படும் உபகரணங்கள், அதன் சுத்தம் என அத்தனையும் தமிழர்களின் மனங்களை மயக்கி விடுகிறது. இந்த சிறப்புகளை நம் தமிழ் தொழிலாளர்களிடம் எதிர்பார்ப்பது சற்று ஏமாற்றமான விஷயம் தான். இதனால் மலையாளிகள் நடத்தும் டீக்கடைகளில் கூட்டம் குவிந்து கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழக மாஸ்டர்களின் ஒரே சிறப்பு அவர்களின் கைப்பக்குவம். நம் மாஸ்டர்கள் தயாரிக்கும் தமிழக உணவுகளின் சுவையினை கேரள நாயர்களால் நெருங்க கூட முடியவில்லை. அதுவும் வடை தயாரிப்பில் நம் மாஸ்டர்களை நெருங்கவே முடியாது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் நம் பதிவில் தட்டுவடை, தோசை வடைகள் பற்றி பார்த்தோம். இந்த விதவிதமான சட்னிகளுடன் வழங்கப்படும் இந்த வடைகளின் விற்பனை சக்கை போடு போடுகிறது. இப்போது பஜ்ஜியில் புதுப்புது அப்டேட்டுகள் வந்து விட்டன.


வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, அப்பள பஜ்ஜி, முட்டை பஜ்ஜி பற்றி கேள்விப்பட்டிருப்போம். சாப்பிட்டிருப்போம். தற்போது சுரைக்காய் பஜ்ஜி, காலி பிளவர் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, அதுவும் காரமிளகாய், காரமில்லாத மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, முட்டைக்கோஸ் பஜ்ஜி என விதவிதமாக அடுக்குகின்றனர். இதற்கேற்ற சட்னிகளையும் தருகின்றனர். இந்த பஜ்ஜியை மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணிக்குள் முடித்து விடுகின்றனர். இல்லை. விற்பனை அதற்குள் முடிந்து விடுகிறது. இதனை எதிர்கொள்ள கேரள நாயர்களால் முடியவில்லை.


இதற்கு மாற்றாக அவர்கள் நேந்திரம் பழம் பஜ்ஜி, பிரெஜ் பஜ்ஜி, வாழைப்பழ பஜ்ஜி என போட்டு விற்கின்றனர். இந்த பஜ்ஜிகளை ஒருமுறை சாப்பிட்டவர்கள் முகம் சுளித்து விடுகின்றனர். நாயரே... டீ, முட்டை, பிரெட் உணவுகள் போதும் (வடை வேண்டாம் என கையெடுத்து கும்பிடும் அளவுக்கு தரம் உள்ளது) என வந்து விடுகின்றனர். இந்த வடை மற்றும் பஜ்ஜி போட்டியில் தமிழக மாஸ்டர்களை வீழ்த்தவே முடியலையே என்ன செய்யலாம் என கேரள நாயர்கள் மீட்டிங் நடத்தி ஆலோசிக்கும் அளவுக்கு தொழில் போட்டி அனல் பறக்கிறது.

Tags

Next Story