ஓய்வூதியதாரர்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர் அறிவுரை
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்க கூட்டத்தில் பெரியகுளம் எஸ்.பி.ஐ., முதன்மை மேலாளர் சரவணன் பேசினார்.
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்க 25வது வெள்ளிவிழா பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. தமிழக தலைவர் கோவிந்தராஜ், மாநில சங்க காப்பாளர் சிவராஜன், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் முருகன், மாநில சட்ட ஆலோசகர் வக்கீல் என்.ராஜாராம், மாநில துணை செயலாளர்கள் திண்டுக்கல் ராஜூ, திருப்பூர் முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரியகுளம் பாராத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சரவணன் பேசியதாவது: இன்றைய சூழலில் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட அத்தனை ஓய்வூதியதாரர்களுக்கும் பாதுகாப்பும், பயன்பாடும் மிக, மிக முக்கியம். காரணம் தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக தற்போதைய நிலையில் ஓய்வு பெற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கும், கையாள முடியாத அளவுக்கும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே மொபைலில் எந்த செய்தி வந்தாலும் அதனை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதனை திறந்து பார்க்காதீர்கள்.
அதேபோல் மொபலில் வரும் ஓ.டி.பி., எண்கள் உட்பட எந்த நம்பர்களையும் யாருடனும் பகிரக்கூடாது. மொபைல் குறுஞ்செய்தி தொடர்பாக ஏதாவது சந்தேகம் வந்தால் வங்கியை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பலருக்கு வங்கிக்கு சென்றால் சரியாக பேச மாட்டார்கள். மதிக்கமாட்டார்கள். பதில் சொல்ல மாட்டார்கள் என்ற தயக்கம் உள்ளது. அதனைப்பற்றி எல்லாம் ஓய்வூதியதாரர்கள், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம்.
தொடர்ந்து வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேவைகளை கேட்டுப்பெறுங்கள். முன்னாள் ராணுவத்தினர் பலர் தற்போது ஓய்வூதிய வருமானம் பெறுகின்றனர். எனவே தங்களது ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை தங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். தங்களது குழந்தைகளிடம் கூட தரவேண்டாம்.
அதேபோல் ராணுவப்பணியில் இருந்து விலகியதும், தவிர பிற அரசு வேலைகளிலும் சேருகின்றனர். எல்லோரும் அரசு வேலைகளை எதிர்பார்த்து காத்திருக்க கூடாது. மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்களில் 75 சதவீதம் பயன்பாடு இல்லாமல் அரசுக்கே திரும்பச் செல்கிறது. இந்த மானியங்களை பெற்று ஓய்வூதியதாரர்கள் தொழில் தொடங்க வேண்டும்.
குறிப்பாக பெண்கள் தொழில் தொடங்க மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரை அடமானம் எதுவும் பெறாமல் கடன் வழங்குகிறது. என்.எல்.எம்., எனப்படும் கால்நடைத்துறை திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இது போன்ற சிறந்த திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பலவகை கடன் திட்டங்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பென்சன்தாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்துறைகளில் ஈடுபடுவது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu