எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்

போடியில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம்.
மூன்று முறை தமிழக முதல்வர், நான்கு ஆண்டுகாலம் துணை முதல்வர், 20 ஆண்டுகாலம் அமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி போடிநாயக்கனூர். இங்கு தோட்டக்கலை அலுவலகம் இன்னுமும் கட்டித்தரப்படவில்லை. மிகவும் சிறிய அறையில் அந்த அலுவலகம் செயல்படுவதால் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர்.
தேனி மாவட்டத்திலேயே அதிகளவு தோட்டக்கலை நிலங்கள், மலைப்பயிர் நிலங்களை கொண்டது போடி சட்டசபை தொகுதி. மிகவும் வளமான தொகுதியாகவும் உள்ளது. இங்குள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒரு உதவி இயக்குனர், ஒரு துணை தோட்டக்கலை அலுவலர், மூன்று உதவி தோட்டக்கலை அலுவலர்கள், ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகம் எட்டு அடி நீளம், எட்டு அடி அகலம் கொண்ட மிகவும் சிறிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு இரண்டு டேபிள்கள் மட்டுமே போட முடியும். ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை ஒரு மூலையில் அமர வைத்துள்ளனர். ஆக ஒரே நேரத்தி்ல மூன்று பேர் மட்டுமே பணியாற்ற முடியும்.
மற்ற மூன்று பேர், அவர்கள் பணி முடித்து வெளியே வரும் வரை களப்பணி ஆற்ற வேண்டியது தான். வெளியே மரத்தடியில் ஒரு டேபிள் போட்டு இரண்டு பேர் அமர்ந்துள்ளனர்.மழை பெய்தால் அவர்கள் நிலைமை அதோகதிதான்.
ஆவணங்கள் வைக்க இடம் இல்லாமல், அங்கும், இங்குமாக குவித்து வைத்துள்ளனர். உரம், பூச்சி மருந்துகள், விதைகள், நாற்றுகள் என எதுவுமே வைக்க இடம் இல்லை. சார், இதெல்லாம் எங்க சார் வைப்பீங்க என கேட்ட போது, ''அந்த கொடுமைய ஏன் சார் கேக்குறீங்க. இங்க ஒரு பழைய அரண்மனை இருக்கு. அங்க அனுமதி வாங்கி அன்அபிசியலா வெச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப அந்த அரண்மனை ரொம்ப சேதமாகி எப்ப வேணாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அங்கு வைக்கவில்லை. உரம் வந்தால் யாராவது தனியாரிடம் (தனியார் உரக்கிடங்கில் இடம் ஒதுக்கி) அனுமதி கேட்டு அங்கு வைத்து விவசாயிகளிடம் கொடுத்து வருகிறோம். இதுவே பெரிய பிரச்னையா இருக்கு சார்'' என தெரிவித்தனர்.
மூன்று முறை முதல்வராகவும், 20 ஆண்டுகள் அமைச்சராகவும், நான்கு ஆண்டுகள் துணை முதல்வராகவும் இருந்த உங்கள் தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்திடம் சொல்லவில்லையா என கேட்டோம். சார், கலெக்டர் மூலம் அவர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பணம் ஒதுக்கி கொடுத்துட்டாரு. கட்டத்தான் இடம் கிடைக்கல. இப்ப இருக்க கலெக்டர் ஒரு வழியா தி.மு.க., அரசிடம் கேட்டு, இடம் வாங்கிட்டாரு, விரைவில் எங்களுக்கும், வேளாண்மைத்துறைக்கும் சேர்த்து ஒரு நல்ல விரிவான கட்டடம் கட்டப்போறாங்க சார். அதுவரைக்கும் சமாளிக்க வேண்டியது தான் சார் என்று பரிதாபமாக கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu