காலையில் தாக்கி பேட்டி, மதியம் போஸ்டர், மாலையில் ஆர்ப்பாட்டம்; ஆட்டம் கண்ட போடி
தேனி மாவட்டம், போடியில் தி.மு.க..,வினரும் அ.தி.மு.க.,வினரும் காலையில் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி கொடுத்தனர். மதியம் ஒருவரை ஒருவர் கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் போடி இன்று முழுவதும் கலகலப்பாக இருந்தது.
போடி தொகுதி எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,க்கும், தி.மு.க.,தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனுக்கும் எப்போதும் ஆகாது. கடந்த தேர்தலில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்கினர். ஓ.பி.எஸ்., வென்றாலும், ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற வகையில் தங்க.தமிழ்செல்வன் கையே போடியில் ஓங்கி உள்ளது.
இதனால் அ.தி.மு.க.,வினருக்கும். தி.மு.க.,வினருக்கும் மோதல் வலுத்துக் கொண்டே வந்தது. இன்று காலையில் இரு தரப்பினரும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி கொடுத்தனர். அடுத்த ஒரிரு மணி நேரத்தில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கண்டன போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டினர்.
திடீரென மாலையில் மீன்மார்க்கெட் அருகே கூடிய அ.தி.மு.க.,வினர் தங்க.தமிழ்செல்வனின் அராஜகம் ஒழிக என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த ஓரிரு நிமிடங்களில் தி.மு.க., மகளிர் அணியினர் தேவர் சிலை அருகே கூடி கடந்த பத்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வஞ்சித்த ஓ.பி.எஸ்., எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்; பணம் கொடுத்து பெற்ற வெற்றி செல்லாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இருதரப்பிற்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலால் போடியில் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர். இன்று முழுவதும் போடி கலகலப்பாகவே இருந்தது. இந்த கலகலப்பு கலவரமாக மாறி விடக்கூடாது என போடி மக்கள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu