காயமடைந்த மயிலை காப்பாற்றிய விவசாயிகள்; அதிகாரிகள், பாெதுமக்கள் பாராட்டு

போடி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மயில்.
தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் காயமடைந்து கிடந்த மயிலை வேலைக்கு சென்ற விவசாயிகள் இருவர் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
தேனி மாவட்டம் போடி அருகே மலையடிவாரத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராமம், சோலைச் செட்டியார் களத்தில் ஒரு மயில் ஒன்று (ஆறு அடி நீளம் உள்ள பெரிய ஆண் மயில்) நெஞ்சில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தது. அங்கு வேலைக்கு சென்ற விவசாயிகள் செல்வம், முருகன், தெய்வேந்திரன் இந்த மயிலை பார்த்தனர்.
உடனே மயிலை மீட்டு போடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் நந்தகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், மாவட்ட சிவசேனா அமைப்பின் தலைவர் சன்னாசி மற்றும் நிர்வாகிகள் ஜெயகணேஷ் ஆகியோரும் போடி கால்நடை மருத்துவமனைக்கு வந்தனர். டாக்டர் காந்தி மயிலுக்கு சிகிச்சை அளித்தார். முதல் உதவி சிகிச்சை முடிந்த பின்னர் உயர் சிகிச்சைக்காக மயில், தேனி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்த பின்னர், மயில் மீண்டும் வனத்திற்குள் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது வேலை பாதித்து, ஒரு நாள் சம்பளம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை மயிலை காப்பாற்ற வேண்டும் என்று துரிதமாக செயல்பட்ட விவசாயிகளை போடி பகுதி பொதுமக்களும், வனத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu