போடி- மதுரை- சென்னை ரயில் போக்குவரத்து: தேனி எம்.பி. ரவீந்திரநாத் வலியுறுத்தல்
மதுரையில் நடந்த பாராளுமன்ற உறு்ப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் தேனி எம்.பி., (இடமிருந்து முதலாவது) ரவீந்திரநாத் பங்கேற்றார்.
தேனி - மதுரை ரயில் சேவையை உடனடியாக துவக்கவும், போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்தவும் தெற்கு இரயில்வே - பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தேனி எம்.பி ப.ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.
தெற்கு ரயில்வே சார்பில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு, கேரளா பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மாலியா, தலைமை நிர்வாக அதிகாரி பிரஃபுல்லா ஷர்மா, மதுரை மண்டல மேலாளர் பி.ஆனந்த், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது: தேனி முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போடி -மதுரை அகல ரயில் பாதை போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
சென்னை சென்ட்ரல்-மதுரை - சென்னை சென்ட்ரல் என வாரத்திற்கு மூன்று நாள் இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடி வரை இயக்க வேண்டும். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் வரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
மதுரை போடி அகல ரயில் பாதை திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தேன். அதனைத்தொடர்ந்து, இந்த இரண்டரை ஆண்டு காலங்களில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் ஆறு மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விடும். ரயில்வே துறையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். அதே போல் தமிழர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் எம்பி ரவீந்திரநாத்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu