போடி கொட்டகுடி ஊராட்சி முறைகேடு: தேனி கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

போடி கொட்டகுடி ஊராட்சி முறைகேடு: தேனி கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
X

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு பஞ்சாயத்தாக இருப்பதாலும், தொடர்ந்து மலையாளிகளால் ஆக்கிரமிக்கப்படக்கூடிய இடத்தில் இருப்பதாலும் அதைப்பற்றி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தொடர்ந்து பேசி வருகிறது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம், தேனி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

போடி தாலுகா கொட்டக்குடி பஞ்சாயத்து நிர்வாகத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் நிர்வாகச் சீர்கேடுகளை குறித்து உங்களை பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லப்பட்டி அருகே உள்ள வனப் பகுதியிலும் கொழுக்கு மலையிலும், சட்ட விரோதமாக குடில் அமைத்து வாடகைக்கு பெரிய தொகைக்கு விடுவதை குறித்து உங்களிடம் நேரிலேயே புகார் கொடுத்து இருக்கிறோம். எந்நேரமும் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள கூடிய அந்த குடில் தொடர்பாக கொட்டகுடி பஞ்சாயத்து நிர்வாகம் கொடுத்து வரும் பல்வகை ரசீது சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம்.

கூடுதலாக அந்த பஞ்சாயத்தில் இருக்கும் முதுவாக்குடியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பசுமை வீடு கட்டுமானம் தொடர்பாக தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகளை குறித்து உங்களிடம் நேரிலேயே மூன்று முறை மனு அளித்திருக்கிறோம்.

பசுமை வீடுகளை காண்ட்ராக்டர்கள் மூலம் கட்டக் கூடாது என்று விதி இருந்தும், கொட்டக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் அதை ஒரு கான்ட்ராக்டரிடம் கட்டுமானத்திற்கு விட்டதே முதல் சட்ட விரோதம்.

காண்ட்ராக்டர் பயனாளிகளின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து அவர்களுடைய வங்கி பாஸ் புக், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்ட் உள்ளிட்டவைகளை சட்ட விரோதமாக பெற்றுக்கொண்டு, பயனாளிகளின் அனுமதி இல்லாமலேயே பணத்தை எடுப்பது, சிமெண்ட், கம்பியை எடுப்பது என்று தொடர்ந்து முறைகேடாக நடந்து வந்திருக்கிறார்.

காண்ட்ராக்டரின் இந்த சட்டவிரோத செயலுக்கு, கொட்டக்குடி பஞ்சாயத்து நிர்வாகமும், போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கும் ஓவர்சியர் மற்றும் ஜே இ ஆகியோரும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் எல்லாம் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, அந்தப் பழங்குடியின அப்பாவிகளின் வாழ்க்கையோடு மூன்றாண்டுகள் விளையாடிய பிறகு, மறுபடியும் தங்களை சந்தித்து முறையிட்ட பிறகு அதற்கு ஒரு விடிவு பிறந்தது. அப்போதும் பயனாளிகளை நம்பி அந்த வீடு கட்டுமான பணிகளை ஒப்படைப்பதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் தயாராக இல்லை. இப்போதும் ஒரு காண்ட்ராக்டரையே ஏற்பாடு செய்தார்கள் போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கக்கூடிய அலுவலர்கள் வேறு வழியின்றி அந்த அப்பாவிகளுக்கு வீடு கட்ட வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது என்கிற நிலையில் நாங்களும் அரைகுறை மனதோடு அதற்கு சம்மதித்தோம்.

அதற்குப் பிறகுதான் தெரிந்தது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் கம்பி சிமெண்ட் எல்லாம் எடுக்கப்பட்டு ஆண்டு இரண்டை கடந்து விட்டது என்பது...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பழங்குடியின மக்களின் பணத்தையும் கம்பி சிமெண்டையும் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டவர்கள், இப்போது புதிதாக வந்த காண்ட்ராக்டரிடம் ஏற்கனவே எடுத்த பணத்துக்கும் பொருளுக்கும் இப்போது இழப்பீடு தருவதாக பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பணமும் பொருளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இதை ஏன் மாவட்ட நிர்வாகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எங்களுக்கு நிறையவே உண்டு.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடிய அத்தனை நபர்களும் போடி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளும், தேசிய பழங்குடியின சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேற்படி முதுவாக்குடியில் வசிக்கும் பரமசிவம் என்பவர், தனக்கு அரசு கொடுத்த பணத்தையும் பொருளையும் ஒருவர் தன்னை கேட்காமலேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்டு விட்டு, இப்போது அதற்கு ஈடாக முப்பதாயிரம் ரூபாய் நான் தருகிறேன் யாரிடமும் இதுகுறித்து பேச வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் சொன்னதாக ஒரு புகாரை போடி காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரை முறைப்படி பழங்குடியின சட்டத்தின் கீழ் பதிவு செய்து, போடி டிஎஸ்பி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் முதுவாக்குடி பரமசிவனுக்கு எதிராக செயல்பட்ட எவரையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விடக்கூடாது.

கூடுதலாக பரமசிவனுக்கு சட்டப்படியான பாதுகாப்பை வழங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விடயத்தில் பயனாளியை கேட்காமல் காண்ட்ராக்டர்களுக்கு பொருளை கொடுத்த போடி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதனுடைய நகல் குடியரசுத் தலைவர் அவர்களுடைய அலுவலகத்திற்கும், தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய சேர்மனுக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும், தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும் அனுப்பி உள்ளோம்.

Tags

Next Story