மசோதா நிறுத்தி வைப்பு: வேலை நேரம் மாற்றப்படுமா?
தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அரசு இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது வரவேற்புக்குரிய விஷயம் தான். ஆனால் மசோதாவை நிறுத்தி வைத்த அரசு 8 மணி நேர வேலை மசோதாவை தீவிரமாக அமல்படுத்துமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் தற்போது வரை 12 மணி நேர வேலை திட்டமே அமலில் உள்ளது. இதனை இதுவரை எந்த அரசியல் கட்சியும் தட்டிக்கேட்கவில்லை. 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் மாதம் அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
சில இடங்களில் மட்டும் நீண்ட நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு டீ, சாப்பாடு வழங்கப்படுகிறது. இதற்குரிய பணம் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இவ்வளவு நெருக்கடிகளையும் தாண்டித்தான் மக்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரிரு நிறுவனங்கள், மில்களில் மட்டுமே 8 மணி நேர ஷிப்ட் அமலில் உள்ளது. இதர நிறுவனங்களில் இப்போதும் 12 மணி நேர ஷிப்ட் தான் அமலில் உள்ளது.
இந்த நிறுவனங்களை அதிகாரிகளின் வசூல் பிடியில் இருந்தும், மாதாந்திர வசூல் நெருக்கடியில் இருந்தும் பாதுகாக்கவே அரசு 12 மணி நேர வேலை திட்ட மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மசோதா நிறுத்தப்பட்டு விட்டது. அதற்காக பணி நேரம் எல்லா இடங்களிலும் 8 மணி நேரம் என குறைக்கப்படுமா? என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.
அரசு தனது அதிகாரிகள் மூலம் இந்த பணி நேரத்தை குறைக்க முயன்றால், அதிகாரிகள் பணி நேரத்தை குறைத்தது போல் ஆவணங்களை தயார் செய்து, தங்களது தனிப்பட்ட வருவாயினை பெருக்கிக் கொள்வார்கள். ஆமாம். இப்போது 12 மணி நேர வேலை நேர மசோதா வாபஸ் பெறப்பட்டதால், அதிகாரிகள் 12 மணி நேரம் ஊழியர்களை வேலை வாங்கும் நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருக்க கூடுதல் கப்பம் கட்ட வேண்டியிருக்கும். உண்மையிலேயே 8 மணி நேர வேலை சட்ட மசோதா அமலுக்கு வர வேண்டும் என்றால் முதல்வர் இந்த மசோதாவில் கூடுதல் கவனம் செலுத்தி, இதன் பலன்கள் ஊழியர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu