தேனியில் போலீசாரை நடுங்க வைத்த பைக் ரேஸ் கும்பல்
பைல் படம்
தேனியை பொறுத்தவரை தீபாவளி அன்றும், மறுநாளும் (இன்று) நகர் பகுதியே வெறிச்சோடிக்கிடக்கும். தேனியில் உள்ள டீக்கடைகள், பல ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் குறைந்தபட்சம் இரண்டு நாள் விடுமுறை விட்டு விடுவார்கள். நேற்றும், இன்றும் தேனியின் தெருக்கள் பெரும்பாலும் வெறிச்சோடியே கிடக்கும்.
தீபாவளியினை அனைத்து தரப்பு மக்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டில் கொண்டாடி வந்தாலும், போலீசார் மட்டும் வழக்கம் போல் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தேனியில் நேற்றைய பொழுது பெரும் சோதனையாக அமைந்தது.
தீபாவளி நாளில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் இணைந்து பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் எதற்கும் அச்சப்படாத பைக்ரேஸ் பிரியர்கள், தேனி ரோடுகளில் மிகவும் அதிக வேகத்துடன் டூ வீலர்களை ஓட்டிச் சென்றனர். ஒரு டூ வீலரில் மூன்று பேர் வரை சென்றனர். இவர்களின் வேகத்தில் யாராவது இடையில் சிக்கினால் அவர்கள் கதி அதோ கதி தான். அவ்வளவு வேகம்.
பைக்ரேஸ் பிரியர்களில் பலர் போதையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் டூ வீலர் ஓட்டி வரும் வேகம், ஒரே வண்டியில் அதிக நபர்கள் பயணிப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என விதிமீறல்கள் இருந்தாலும், போலீசார் சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காரணம், இவர்கள் வரும் வேகத்தில் டூ வீலரை நிறுத்தி சோதனை செய்வது சாத்தியமில்லை. தான் தப்பினால் போதும் என்ற மனநிலைக்கு பல இடங்களில் போலீசார் தள்ளப்பட்டு விட்டனர்.
இந்த போதை டூ வீலர் பிரியர்களை விட்டு விட்டனர். இவர்கள் சுற்றி வந்தது எல்லாமே தேனியில் நகர் பகுதி முழுக்க இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருக்கும். இந்த பதிவுகளை ஆய்வு செய்து, ஓரிரு நாளில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், இவர்களுக்கு போலீசார் மீது உள்ள அச்சம் போய் விடும். தவிர தேனி ரோடுகளில் பாதுகாப்பு இன்மை அதிகரித்து விடும். எனவே மாவட்ட எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பைக்ரேஸ் பிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் வேகமாக டூ வீலர் ஓட்டி வரும் போது, ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் மீதும் மோத வாய்ப்பு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. ஏற்கெனவே இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. போலீசார் இனியாவது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். இந்த ரேஸ் பிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu