பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை

தேனியில் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் பெரியகுளம் ரோடு.

தேனியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தேனி கிழக்கு சந்தை வழியாக தனியார் பள்ளியைச் சேர்ந்த 7000 பள்ளி மாணவ மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். பள்ளி வாகனங்களும் இங்கு வந்து செல்கின்றன. காலையில் பள்ளிக்கு செல்லும் நேரம் காலை 8:30 முதல் 9.15 மணி வரையிலும், மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் நேரம் 3.00 மணி முதல் 4.30 வரையிலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.

இந்த குறிப்பிட்ட நேரங்களில் சரக்கு லாரிகள், சரக்கு வேன்கள் அதிக அளவில் இந்த ரோட்டு பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன. பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சரக்கு வாகனங்களை வேண்டுமென்றே நிறுத்தி வைப்பதும் நடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் அழைத்து வரப்படும் குழந்தைகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் அன்றாடம் தொடர்கிறது. பெரியகுளம் சாலையில் போக்குவரத்திற்கு ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர் ஒருவர் மட்டும் ஈடுபடுத்தப்படுகிறார். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில் சரக்கு வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும்.அதற்கான தடையினை கடந்த காலங்களில் இருந்தது போல் மீண்டும் அமல்படுத்துவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான குழந்தைகள் நலனா? நான்கு ஐந்து வியாபாரிகள் நலனா? என்றால் இங்கு வியாபாரிகளின் நலனே முதன்மையாக பார்க்கப்படுகிறது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இந்த விஷயம் காவல்துறை கவனத்திற்கு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குழந்தைகள் நலனுக்கு எதிரானது. வரும்முன் காப்பதே விழிப்புணர்வு எனவே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். விரைவில் தேர்வுகள் வருகின்றன. மாணவ மாணவிகள் வெயிலில் சிக்கி உளவியல் நெருக்கடியுடன் தேர்வு எழுதச் செல்லும் நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என இந்து எழுச்சி முன்னணி நினைக்கிறது. பள்ளி குழந்தைகள் நலன் கருதி சரக்கு வாகனங்கள் கிழக்கு சந்தை பகுதிக்கு வந்து செல்வதற்கான நேரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பள்ளி குழந்தைகள் வந்து செல்லும் நேரங்களில் சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். மேலும் பங்களாமேடு பாரஸ்ட்ரோடு பிரிவில் விபத்து அதிகமாக நடைபெறுவதால் அந்த இடத்தில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மனு கொடுக்கும் போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, நகர தலைவர் செல்வபாண்டியன், நகர துணை தலைவர் நாகராஜ், நகர அமைப்பாளர் சிவராம், சட்ட உரிமை கழக நிர்வாகி தினேஷ், நகரதுணை செயலாளர்கள் ஜீவா. ராமகிருஷ்ணன், இந்து எழுச்சி முன்னணி ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதி வாழையாத்துபட்டி கோடீஸ்வரன், அரண்மனை சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story