அஜித்தோவல் - கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பின் பின்னணி
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய்தோவல்- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, ராஜ்பவன் மாளிகையில் சந்தித்து உரையாடியிருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல். மத்திய உளவுத்துறையில் இருவருமே ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் மட்டுமல்ல, 2018-ல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரவி பணிபுரிந்த போது, தேசிய பாதுகாப்பு கொள்கையை இந்த இருவரும் தான் வடிவமைத்தனர். இந்தச் சூழலில், திடீரென ஆளுநர் ரவியை அஜித் தோவல் சந்தித்திருப்பது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தோம்.
"கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில், பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை சென்றிருந்தார் அஜித் தோவல். இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடங்கி, அந்நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரையும் சந்தித்தார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மொரிசீயஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்புக் குழுவின் கூட்டத்திலும் பங்கேற்றவர், உளவுத்தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி சென்னை வந்தவர், அன்றைய இரவு ராஜ்பவனில் தான் தங்கினார். அடுத்தநாள் காலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் அஜித் தோவலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நீண்டநேரம் விவாதித்தனர்.
குறிப்பாக, தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் என்.ஐ.ஏ வழக்குகள் குறித்துக் கேட்டறிந்தார் அஜித் தோவல். கும்பகோணம் இராமலிங்கம் கொலை வழக்கு தொடங்கி, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வரை தோவலுக்கு விவரித்தார் ஆளுநர் ரவி. பி.எஃப்.ஐ அமைப்பு தொடர்பாகவும் இருவரும் பேசினர். தொடர்ச்சியாக, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுவது குறித்தும், தாக்குதல் நடைபெறுவது குறித்தும் தோவலுக்கு எடுத்துரைத்தார் ஆளுநர்.
கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். இருவருக்கும் இடையேயான விவாதத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது, போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பாகத்தான். ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் புகாரில் சிக்கியிருப்பது குறித்தும், அந்த வழக்கு குறித்தும் இருவரும் விவாதித்தனர். தமிழகத்தில், போதைப்பொருள் நடமாட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என ஆலோசித்தனர்" என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவத்தன.
அஜித் தோவல் - ஆர்.என்.ரவி இடையேயான சந்திப்பு முழுவதும் பாதுகாப்பு தொடர்பானது மட்டுமே என்கிறது ராஜ்பவன் வட்டாரம். அதேநேரம், "இருவருக்கும் இடையே வெறும் பாதுகாப்பு விவகாரம் மட்டும் தான் பேசப்பட்டது என்றால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆளுநர் டெல்லி செல்லும் போதே, அது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும். இருவரின் சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. தி.மு.க-வின் நடவடிக்கைகள் குறித்து தோவலிடம் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் ஆளுநர் ரவி" என்கிறார்கள் ரவிக்கு நெருக்கமான முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu