அடிப்படை வசதிகள் இல்லாமல் தேனி மாவட்டத்தில் அவதிக்கு உள்ளாகும் ஐயப்ப பக்தர்கள்

அடிப்படை வசதிகள் இல்லாமல் தேனி மாவட்டத்தில் அவதிக்கு உள்ளாகும் ஐயப்ப பக்தர்கள்

சபரிமலைக்கு செல்லும் வழிகாட்டி அறிவிப்பு 

சபரிமலைக்கு தேனி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள், செல்லும் வழியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் வடமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்களில் 70 சதவீதம் பேர் வரை தேனி மாவட்டத்தை கடந்து செல்கின்றனர்.

இப்படி வரும் பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையில் நுழைந்ததும் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், பெரியகுளம் கும்பக்கரை அருவி, தண்டாயுதபாணி கோயில், வரதராஜபெருமாள் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோயில், சனீஸ்வரர் கோயில், பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், கூடலுார் காளியம்மன் கோயில், பகவதியம்மன் கோயில், லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயில், சுருளி அருவி போன்ற இடங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.

நடைபயணமாக வருபவர்களாக இருந்தாலும், வாகனத்தில் வருபவர்களாக இருந்தாலும் தங்களுக்கு எந்த இடத்தில் வசதிப்படுகிறதோ அந்த இடத்தில் தங்கிச் செல்லும் நடைமுறையினை கடைபிடிக்கின்றனர். அதேபோல் ஆண்டிபட்டி வழியாக வருபவர்கள் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோயில்களில் தங்குகின்றனர்.

ஆனால் தேனி மாவட்டத்தில் இந்த இடங்களில் பக்தர்கள் தங்கி செல்வதற்கு எந்த வசதிகளும் இல்லை. தற்போது மழை நேரம் என்பதால் மஞ்சளாறு, வராகநதி, வரட்டாறு, கொட்டகுடி ஆறு, முல்லை பெரியாறு, வைகை நதி, சுருளியாறு, வராகநதி என எல்லா இடங்களிலும் தண்ணீர் மட்டும் தாராளமாக கிடைக்கிறது. தங்குமிடம், உணவுசமைக்கும் இடம், கழிப்பிடம், குளிக்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் வீரபாண்டியை தவிர வேறு எங்குமே இல்லை.

இதனால் தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இது தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும் நன்கு தெரியும். இருப்பினும் இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யாததால், வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கும், சங்கடத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story