ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள தேனி மாவட்ட அரசியல் குழப்பம்

ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள தேனி மாவட்ட அரசியல் குழப்பம்
X
தேனி மாவட்ட அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் நிலவும் கடுமையான அரசியல் குழப்பம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேனி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தான் கூட்டினார். அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் சசிகலாவையும், தினகரனையும் அ.தி.மு.க.,வில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சையதுகானே பகிரங்கமாக அறிவித்தார். இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை அ.தி.மு.க., நிர்வாகிகளையும் ஒருங்கிணைந்து இதே தீர்மானத்தை நிறைவேற்ற மண்டபம் புக்காகி இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி திடீரென ரத்தாகி விட்டது.

அதுமட்டுமல்ல ஓ.பி.எஸ்., ஒப்புதலோடு தான் அவரது தம்பி ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்பு, கூடலுார் நகர ஜெ., பேரவை செயலாளர் சேதுபதி ஆகியோர் திருச்செந்துாரில் சசிகலாவை சந்தித்தனர். இந்நிலையில் இவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இங்கு நிலைமை இப்படி என்றால் தி.மு.க.,வில் நிலைமை அதைவிட படுமோசம். பல இடங்களில் கட்சி கூட்டணிக்கு கொடுத்த இடங்களை மேலிடத்தின் கண்காட்டுதல் அடிப்படையில்தான் தி.மு.க., எடுத்தது. குறிப்பாக தேனி நகராட்சி தலைவர் பதவியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், அமைச்சர் ஐ.பெரியசாமி ஒப்புதலின் பேரில் தான் எடுத்தோம் என வெற்றி பெற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேணுப்பிரியா பாலமுருகனை மீண்டும் ராஜினாமா செய்ய சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஐ.பெரியசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், காங்., மாவட்ட தலைவர் முருகேசன் உட்பட பலர் இப்போது மாறி, மாறி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு இவர்கள் கூறும் காரணம், ரேணுப்பிரியா பாலமுருகன் ராஜினாமா செய்யாவிட்டால், கட்சி அறிவுறுத்தல்படி ராஜினாமா செய்ய உள்ள மற்றவர்கள் இதனை முன்உதாரணமாக காட்டுகின்றனர் என காரணம் சொல்கின்றனர்.

அதனை விட பெரிய கொடுமை, தேனி நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் செல்வம். ரேணுப்பிரியா பாலமுருகன் ராஜினமா செய்தால், அவருக்கு துணைத்தலைவர் பதவி தர வேண்டும். எனவே நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என நிர்வாகிகள் சிலர் வலியுறுத்துகின்றனர்.

வழக்கறிஞர் செல்வமோ, 'நான் எந்த குழப்பமும் செய்யவில்லை. எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. கட்சி தான் என்னை அறிவித்தது, நான் தான் முறைப்படி தேர்வாகி பதவியேற்று விட்டேன். என்னை ஏன் இந்த குழப்பத்தில் இழுக்கிறீர்கள்' என கேள்வி எழுப்புகிறார். இப்படிகுழப்பம் நீடிப்பதால் ஐ.பெரியசாமி தலைமையில் பேச்சு வார்த்தை தொடர்கிறது. தேனி மாவட்டத்தில் இரு பெரும் கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள குழப்பம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், தேனி மாவட்டத்தை நோக்கி திரும்ப வைத்துள்ளது.

Tags

Next Story
ai powered agriculture