கம்பத்தில் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கம்பத்தில் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
X

கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கலைவாணி கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

கம்பத்தில் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் தீரவே தீராத; இல்லையில்லை தீர்க்கவே முடியாத பிரச்னை என்று கந்து வட்டிக் கும்பல் பிரச்னையை சொல்லலாம். கந்து வட்டி, ரன்வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி, வார வட்டி, மாத வட்டி இன்னும் பல்வேறு பெயர்களில் தனியார் ரவுடிக்கும்பல் கடன் கொடுத்து பொருளாதாரத்தில் எளியவர்களை எளிதில் வீழ்த்தி வருகிறது. இந்த கடன் கொடுக்கும் கும்பலிடம் சிக்கிய பலர், ஊரை காலி செய்து விட்டு ஓடுகின்றனர். சிலர் விஷம் குடித்து இறந்து விடுகின்றனர்.

போலீசாரால் வரவு- செலவு பிரச்னையில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தவிர பல இடங்களில் இந்த கந்துவட்டிக் கும்பலுக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. இப்படி எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின்னர், வேறு வழியின்றி கடன் வாங்கியவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த கதை இன்றல்ல, நேற்றல்ல, பல ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் தொடர்கிறது. எத்தனையோ வல்லமை வாய்ந்த எஸ்.பி.,க்கள் பணிபுரிந்தும் இந்த கந்துவட்டிக்கும்பலை அசைக்க முடியவில்லை. காரணம் இவர்களின் பின்னணி அரசியல் சார்ந்ததாகவே உள்ளது. நேற்றும் ஒரு குடும்பம் கந்து வட்டிக் கும்பலுக்கு பயந்து குடும்பத்துடன் விஷம் குடித்தது. இது பற்றி பார்க்கலாம்.

உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி, ஊத்துக்காடு ரோடு எஸ்.டி.கே நகரில் வசிப்பவர் பிச்சைமணி (43) - ஜீப் டிரைவராக உள்ளார். இவரது மனைவி கலைவாணி (34) , இவர்களுக்கு விமலா (16), விகாஷினி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். குடும்ப செலவுகளுக்காக பிச்சைமணி உள்ளூர் நபர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் கடனை கேட்டு மிரட்டி ஆபாசமாக பேசியதாகவும், இதனால் விரக்தியடைந்த பிச்சைமணி நேற்று மாலை எலிக்கு வைக்கும் விஷ பவுடரை தண்ணீரில் கலந்து தனது மனைவி மகள்களுக்கு கொடுத்துள்ளார். வீட்டில் சத்தம் கேட்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 4பேரையும் மீட்ட உத்தமபாளையம் போலீஸார் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற கந்துவட்டிக்கும்பலையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare