பளிச் என சாலைகள்: முதல்வர் வருகையால் தேனி அழகானது நகரமாக மாறியது

பளிச் என சாலைகள்: முதல்வர் வருகையால் தேனி  அழகானது நகரமாக மாறியது
X

முதல்வர் ஸ்டாலினை வரவேற்க பளிச் என காணப்படும் தேனி பெரியகுளம் ரோடு.

முதல்வர் ஸ்டாலின் வருகையால் தேனி நகராட்சி பகுதி புதுப்பொழிவு பெற்று அழகான நகரமாக மாறி உள்ளது.

தேனி நகராட்சியில் நிர்வாக காரணங்களை காட்டி திடீரென 100க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. வீடு, வீடாக சென்று குப்பை வாங்கும் பணிகளே பாதிக்கப்பட்டது. நகரில் குப்பை மேலாண்மை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியது.

எங்கு திரும்பினாலும் குப்பைகள் குவிந்து துர்நாற்றத்துடன் காணப்பட்டது. அழகிய தேனி அழுகிய தேனியானது. இந்த நிலைக்கு விடிவு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகை அறிவிக்கப்பட்டது. அவர் தங்குமிடம், நிகழ்ச்சி நிரல் தொடர்பாக மூன்று வகையான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. தங்குமிடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போது வரை அவர் எங்கு தங்குகிறார். எங்கெங்கு செல்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் அவர் எங்கு தங்கினாலும் தங்குவார். எங்கு சென்றாலும் செல்வார். நாம்தான் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.,யும், கலெக்டரும் ஒருசேர அறிவித்து விட்டனர்.

இதனால் நகராட்சி பகுதி முழுக்க சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டன. அத்தனை பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்பட்டன.ரோடுகள் முழுக்க கூட்டி குப்பைகளை அகற்றி சீரமைத்தனர். மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு முழுக்க திருவிழா நடப்பது போல் சீரமைக்கப்பட்டது. உழவர்சந்தை, தென்றல் நகர், நரிக்குறவர் காலனி என அவர் எங்கெங்கு செல்வார் என கணித்தார்களோ அங்கெல்லாம் துப்புரவு பணி செய்து விட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அத்தனை அரசுத்துறைகளும் துப்புரவு மற்றும் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டன. கிட்டத்தட்ட தேனியில் 90 சதவீதம் இடங்கள் பளிச் என ஆகி விட்டன. மாவட்டத்தின் பிற நகராட்சியில் இருந்து இதற்காக துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிமிடம் வரை (பிற்பகல் 4 மணி வரை) அவரது நிகழ்ச்சிநிரல் பற்றி தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேனி நகர மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல்வர் வந்து சென்ற பின்னர் மீண்டும் தேனி பழைய நிலைக்கு திரும்பி விடக்கூடாது. இதற்கு முதல்வர் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
இந்த குளிர்காலத்துல டெய்லியும் வெந்நீர்ல குளிக்கிறீங்களா?.. கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க!