கம்பத்திற்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை: மக்களுக்கு அறிவுறுத்தல்
கம்பம் மெட்டு குடியிருப்பில் உலா வரும் அரிசிக் கொம்பன்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் வனப்பகுதியில் சுற்றி பல பேரை கொன்ற அரிசிக் கொம்பன் யானையை பிடித்து குமுளி மேட்டமலையில் விட்டனர்.
அந்த யானை மேகமலை வழியாக சுற்றி மீண்டும் கண்ணகி கோயில் மலை அமைந்துள்ள மலைப்பகுதி வழியாக வந்து, கூடலுார் வனப்பகுதியில் தங்கியது. தமிழக வனத்துறையினர் இந்த யானையை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கூடலுார் கழுதைமேட்டு வனப்பகுதிக்குள் இருந்த யானை அங்கிருந்து வனப்பகுதி ஓரமாக வந்து தனியார் மாதுளை தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் மலையடிவாரம் வழியாக வந்து இன்று காலை கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நடராஜன் திருமண மண்டபம் பின்புறம் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது.
தற்போது கம்பம் மெட்டு மலைப்பகுதியை கடந்து கம்பம் கூழத்தேவர் தெருவிற்குள் நுழைந்து அங்கு ஒருவரை தாக்கியது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் கிருஷ்ணாபுரம் வந்து, அங்கிருந்து கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் வீடு அமைந்துள்ள தெருவிற்குள் சென்று ஊழவர் சந்தை வழியாக கடந்து ஊத்துக்காடு பகுதிக்கு சென்று கொண்டுள்ளது.
இந்த யானையை தமிழக வனத்துறையினர் பின்தொடர்வதால் இதுவரை உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதால், ஊத்துக்காடு, கோம்பை, தேவாரம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இப்படியே இந்த யானையை தேவாரம் மலைப்பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து மூணாறு மலைப்பகுதிக்குள் அனுப்பி வைக்க தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக வனத்துறை கேரளாவிற்குள் மீண்டும் அரிசிக் கொம்பனை அனுப்பி விடும் என நினைத்து கேரள வனத்துறை தமிழக வனத்துறையினருடன் இணைந்து அரிசிக் கொம்பனை கண்காணிக்க தொடங்கினர். அதாவது கண்காணிப்பது போல், அரிசிக் கொம்பனை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டி விட தீர்மானித்தனர்.
இதனை உணர்ந்து கொண்ட தமிழக வனத்துறை, எங்கள் வனப்பகுதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வனப்பகுதியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டனர். இதனால் கேரள வனத்துறையினர் திரும்ப சென்று விட்டனர். ஒரு யானையை பாதுகாக்க முடியாமல் கேரள வனத்துறை திணறுவதை கண்டு தமிழக மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதன் பின்னணி காரணம் உண்டு.
கேரளாவில் யானைகள் வாழும் பகுதியில் கேரள வனமாபியா பெரிய அளவில் ரிசார்ட்டுகளை கட்டிக் கொண்டுள்ளது. இதனை பாதுகாக்க கேரள வனத்துறை வேலை செய்கிறது என கடும் புகார் கூறியுள்ள பெரியாறு, வைகை பாசன விவசாயிகள், இது பற்றிய முழு விவரங்களையும் செய்தியாக விரைவில் வெளியிடுவோம் எனக்கூறி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu