அரிகொம்பன் யானைக்கு காயம்: ஐந்து மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பு

அரிகொம்பன் யானைக்கு காயம்: ஐந்து மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பு
X

அரிசிக்கொம்பன் எனப்படும் அரிக்கொம்பன் யானை 

வனத்துறையின் பக்கும் இல்லாத செயல்பாடுகளால் அரிக்கொம்பன் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கடுமையாக கொந்தளிக்கின்றனர்.

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிக்கொம்பன் யானை காரணமாக தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக தமிழக கேரளா எல்லையான தேனி மாவட்ட பகுதியில் ஒரு பதட்டமான சூழல் நிலவிக் கொண்டு வருகிறது. இதற்கு யார் காரணம்? எதனால் இந்த சூழல் ஏற்பட்டது?

குறைந்தபட்சம் தேனி மாவட்ட வனத்துறை தங்களது பொறுப்பை உணர்ந்து பிரச்சனை வருமுன் காத்திருக்க வேண்டும். அதாவது கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக எல்லையை ஒட்டி உள்ள கண்ணகி கோட்டம் வனப்பகுதியில்கேரளா வனத்துறை இந்த அரி்சிக்கொம்பன் என்கின்ற அரிக்கொம்பன் யானையை விடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் தங்களது எதிர்ப்பை ஏதேனும் ஒரு மாற்று வழியை வருகின்ற பாதிப்பை முன்கூட்டி அறிந்து கேரளா வனத்துறைக்கு தமிழக வனத்துறை எடுத்துரைத்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தேனி மாவட்ட வனத்துறையின் அலட்சியமே இன்று இவ்வளவு பெரிய அவல நிலைக்கு காரணம். மக்களை மட்டுமின்றி வனத்தை உருவாக்குகின்ற தன்மை படைத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு மழை என்ற உன்னதமான இயற்கையை உருவாக்குகின்ற ஒரு யானையும் சேர்ந்து சித்திரவதை படுத்துவது தான் மிகப்பெரிய வேதனை.

இந்த சித்திரவதை காரணமாக அரிசிக் கொம்பன் என்ற அரிக்கொம்பன் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகிறது. காயத்துடன் சுற்றி வரும் யானை சம்பந்தமான விஷயத்தில் ஏன் தேனி மாவட்ட வனத்துறை வெளிப்படையான போக்கை கடைப்பிடிப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

தன்னுடைய வழித்தடத்தை தேடிச் சென்ற யானை எப்படி தடம் மாறி கம்பம் நகருக்குள் வந்தது?. இதற்கு முழுக்க முழுக்க வனத்துறையின் கவனக்குறைவு மட்டுமே காரணம்.

மூன்றுக்கும் மேற்பட்ட கும்கி யானைகளுடன் யானை பராமரிப்பில் கைதேர்ந்த பழங்குடி சகோதரர்கள் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இவ்வளவு பெரும் கூட்டம் இந்த அரிசி கொம்பன் யானையை நோக்கி பயணிக்கின்ற வேளையில் ஏன் உண்மை நிலையை அறிய பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பதில்லை? இந்த மறைமுக நிகழ்வுகள் நமக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த அரிசி கொம்பன் யானையை பொருத்த வரையில் ஏற்கனவே கேரள வனத்துறையால் மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு பிடிக்கப்பட்டது. ஒருமுறை மயக்க மருந்து செலுத்தப்பட்டால் அதன் அளவைப் பொறுத்து மீண்டும் மயக்க மருந்து செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 90 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்த பின்பும் மீண்டும் இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்த நினைப்பது எந்த விதத்தில் சாத்தியமாகும்.

அப்படி வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டால் யானையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று வனத்துறைக்குத் தெரிந்தும் கூட அதுபோன்ற ஒரு செயல்பாட்டை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல. இந்த பூமியில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தவறுகளை நாம் செய்து விட்டு அதற்கான காரணங்களை வாயில்லா ஜீவனிடம் காண்பிப்பது முறையான போக்கு அல்ல. குறைந்தபட்சம் யானைக்கு தேவையான முதல் உதவிகளை நாம் உடனே செய்தாக வேண்டும். யானை பலத்த காயம் பட்டிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட வேண்டாம். அதற்குத் தேவையான உணவையும் அதற்கு தேவையான தண்ணீரையும் நாம் முறையாக கொடுத்து அரிசி கொம்பனை காத்து மீண்டும் அதனுடைய வாழ்விடமான அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் கொண்டு விடுவதே மனிதாபிமானத்தின் அடிப்படை தத்துவம்.

இதை ஒருபோதும் தமிழக வனத்துறை மறந்துவிடக்கூடாது. இந்த விஷயத்தில் முறையாக அரிசி கொம்பன் யானையை பாதுகாக்க தவறும் பட்சத்தில் மீண்டும் மக்களிடத்தில் பீதியோ உருவானால், அதை ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகைபாசன விவசாய சங்கம் ஒருபொழுதும் வேடிக்கை பார்க்காது. அரிக்கொம்பனை பாதுக்காவிட்டால் ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறியுள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture