நீங்கள் சீனியர் சிட்டிசனா? ஸ்டேட் வங்கியில் கிடைக்குது கூடுதல் வட்டி

நீங்கள் சீனியர் சிட்டிசனா? ஸ்டேட் வங்கியில் கிடைக்குது கூடுதல் வட்டி

தேனியில் எஸ்.பி.ஐ., வங்கிகளின் சேவை திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருந்தால் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்து கூடுதல் வட்டி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எஸ்.பி.ஐ., வங்கிகளில் பொதுமக்கள் போடும் டெபாஸிட் பணத்திற்கான வட்டி 7.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இதே வட்டி 7.60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் இருந்து அதிகாரிகள் விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு உதவி பொது மேலாளர் தனபால் தலைமை வகித்தார். தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளை முதன்மை மேலாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். துணை மேலாளர்கள் கார்த்திக், பிரியங்கா, உதவி மேலாளர்கள் செந்தில்பெருமாள், சரத்குமார், மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன்பு தொடங்கிய ஊர்வலம் பெரியகுளம் ரோடு, என்.ஆர்.டி., ரோடு, காந்திஜி பூங்கா, சமதர்மபுரம், சிவராம் நகர் வழியாக அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சென்று அங்கிருந்து மீண்டும் பெரியகுளம் ரோடு வழியாக தேனி போலீஸ் நிலையத்திற்கு வந்தது. போலீஸ் நிலையத்திற்குள் சென்ற வங்கி அதிகாரிகள் அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர். பின்னர் தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் வந்து ஊர்வலம் நிறைவடைந்தது.

இது தொடர்பாக முதன்மை மேலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:-

பிற வங்கிகளை விட எஸ்.பி.ஐ., வங்கியில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் வழங்கப்படுகின்றன. முத்ரா திட்டம், ஸ்டேண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக கடன்கள் வழங்கப்படுகின்றன. முதுமை காலத்தில் வருவாய் வரும் வகையில், குறைந்த பட்ச வருவாயினை உறுதிப்படுத்தும் வகையிலும், குறைந்த தவணைகள் மட்டும் செலுத்தி மாதாந்திர பென்சன் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெர்சனல் ஆக்ஸிடெண்ட் இன்சூரன்ஸ் என்ற சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளில் உள்ளது. ஒரு நாளைக்கு 2 ரூபாய் 70 பைசா அதாவது ஒரு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். இயற்கையான மரணங்களை தவிர்த்த இதர வகை மரணங்களுக்கு இந்த திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய பிளஸ் என்ற மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மிகவும் குறைந்த பிரீமியத்தில் ஒரு குடும்பத்திற்கே காப்பீடு செய்யும் வசதி இந்த திட்டத்தில் உள்ளது.

இந்த திட்டத்தில் எந்த நோய்க்கும் சிகிச்சை பெற்றாலும், முழு செலவு தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாம் விரும்பிய வகையில், விரும்பிய தொகைக்கு காப்பீடு செய்யும் வசதியும் உள்ளது. எஸ்.பி.ஐ., வங்கி பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கி வருகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.

Tags

Next Story