தேனியில் சிக்கியது தீவிரவாதிகளா? மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை
தேனி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பேசக்கூடிய பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி., இணைப்புகளின் சேவைக்குறியீட்டு சிக்னல் அளவு மிகவும் அதிகமாக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும், பயன்படுத்தப்பட்ட அளவுக்கும் அதிகளவு வித்தியாசம் இருந்தது.
குறிப்பாக தேனியில் பெரியகுளம் ரோட்டோரம் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் பின்புறம் உள்ள கட்டடத்திலும், பழைய பஸ்ஸ்டாண்ட் கடையின் பின்புறமும், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்திலும் இந்த அலைக்கற்றை சேவை பயன்பாடு மிகவும் அதிகளவு இருந்தது. இது குறித்து தேனி இளநிலை டெலிகாம் அலுவலர் முனியாண்டி போலீசில் புகார் செய்தார்.
தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க், தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில், 'வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஐ.எஸ்.டி., அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக இங்கிருந்து மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. அதேபோல் இந்த அழைப்புகள் மூலம் பண மோசடியும் நடந்திருக்கலாம். தவிர தீவிரவாதிகளுக்கும் இந்த சேவை முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகம் எழுந்தது.
துரிதமாக செயல்பட்ட மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், சஜீர் (வயது40,), முகமதுஆசிப்,( 27 )ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 31 ரிசீவர்கள், (இது அலைக்கற்றை சேவையினை முறையாக எடுத்து உள்ளூர் அழைப்புகளாக மாற்றித்தரும். தவிர இதன் மூலம் பயன்படுத்தி பேசப்படும் நம்பர்கள் மூலம் எங்கிருந்து பேசப்பட்டது என்ற விவரமும் பதிவாகாது. கண்டறியவும் முடியாது), 992 சிம்கார்டுகளையும் கைப்பற்றினர். (இவ்வளவு சிம் கார்டுகள் எப்படி பெற்றனர் என்றே தெரியவில்லை). கைதானவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சென்னை உட்பட மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தனியார் மொபைல் நிறுவனம் போன்றே செயல்பட்டிருக்கின்றனர். தீவிரவாதிகளுடன் தொடர்பும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் உள்ளது.
இவர்கள் மீது இந்திய அலைக்கற்றை சேவை முறைகேடு தடுப்பு பிரிவு உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu