மஞ்சப்பை விருது பெற்ற மருத்துவருக்கு தேனியில் பாராட்டு விழா
தமிழக அரசின் மஞ்சப்பை விருது பெற்ற டாக்டர் ராஜ்குமாருக்கு (கழுத்தில் மாலை அணிந்திருப்பவர்) பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தேனி நலம் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் ராஜ்குமார் எம்.டி., சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான தமிழக அரசின் மஞ்சப்பை விருதினை பெற்றார். கூடவே அரசின் 10 லட்சம் ரூபாய்க்கான பொற்கிழியையும் பெற்றார்.
சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் தேனியில் பாராட்டு விழா நடந்தது. தேனி மாவட்ட பா.ஜ.க வர்த்தகப்பிரிவு தலைவரும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான கே.கே.ஜெயராம் நாடார் தலைமை வகித்தார்.
மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், இந்து எழுச்சி முன்னணி மாவட்டத்தலைவர் ராமராஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் எம்.பி.எஸ்., முருகன், பா.ஜ.க வர்த்தகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, தேனி வையை தமிழ்ச்சங்க தலைவர் இளங்குமரன், இந்திய கலாச்சார நட்புறவுக்கழக மாநிலசெயலாளர் பெத்தாட்ஷி ஆசாத்,
பசுமைத்தேனி சர்ச்சில் துரை, சித்தர் சிவா, வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் நாணயம் வே.சிதம்பரம், தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை பொருளாளர் கண்ணன், ஹோட்டல் சங்க தேனி நகர செயலாளர் பொன்.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் டாக்டரின் சேவைகள் குறித்து வாழ்த்தி பேசினர். பொன்னாடைகள், மலர் மாலைகள் அணிவித்து கவுரவித்தனர்.
டாக்டர் ராஜ்குமார் தனது ஏற்புரையின் போது பேசியதாவது: இந்த உலகம் இதுவரை ஐந்து முறை பேரழிவை சந்தித்துள்ளது. தற்போது ஆறாவது முறை பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மனிதன் மட்டுமே காரணம். மனிதன் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசு காரணமாக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் கூட சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஊட்டியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் ஏ.சி. பொருத்தும் அளவுக்கு பருவநிலை வெப்பமயமாகி வருகிறது.
இப்போது உருவாகி உள்ள பருவநிலை மாறுபாடுகள் அத்தனைக்கும் நெகிழி, பாலித்தீன் பயன்பாடுகள் அதிகரித்ததே முக்கிய காரணம். முதன் முதலில் பாலித்தீன் உலகில் 1862ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அந்த பாலீதீன் இன்னும் அழியாமல் பூமியில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 25 லட்சம் டன் பாலீதீன் கழிவுகள் உருவாகின்றன. (உலகம் முழுவதும் எவ்வளவு உருவாகும் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்). உலகில் 90 லட்சம் சதுர மைல் கடல்பரப்பு பாலத்தீன் பொருட்களால் மாசடைந்து உள்ளது.
நம் பூமியை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நம் பூமியையும், அதன் இயற்கை சூழலையும் பாதுகாப்பது மட்டுமே நாம் வரும் தலைமுறைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல விஷயமாக இருக்கும். பூமியின் சுற்றுச்சூழல் கெட்டு விட்டால் நம் தலைமுறைகள் வாழவே முடியாது. இப்போதே டில்லி உட்பட்ட நகர்ப்புற பகுதிகளில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் வசிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி உள்ளன. எனவே பூமியை பாதுகாப்பதில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu