இடுக்கி எஸ்.பி.,யுடன் சந்திப்பு : நடந்தது என்ன? அன்வர் விளக்கம்

இடுக்கி எஸ்.பி.,யுடன் சந்திப்பு :  நடந்தது என்ன? அன்வர் விளக்கம்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கேரள போலீஸ் மற்றும் உளவுத்துறை தங்களது பார்வையினை மாற்றிக் கொண்டுள்ளது.

நீண்ட காலமாகவே இடுக்கி மாவட்ட காவல்துறை மற்றும் உளவுத்துறையின் பார்வை பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மீது மிகக் கடுமையாகவே இருக்கும். குறிப்பாக 2008 மற்றும் 2009ம் ஆண்டு காலகட்டங்களில் வண்டிப்பெரியாறு, தேவிகுளம், மூணாறு பகுதிகளில் அன்வர் பாலசிங்கம் செய்த வேலைகள் எல்லாம் அலாதியானது. எப்படியாவது ஒரு தமிழர் எழுச்சி ஏற்பட்டு விடும் என்று நம்பி அதற்காக பல வேலைகளை செய்தார்.

குறிப்பாக 1956 மொழிவழிப் பிரிவினை குறித்து விரிவாக அன்வர் பாலசிங்கம் எழுதிய கட்டுரைகள், இடுக்கி மாவட்டம் மட்டுமல்லாது. கேரளா முழுவதிலும் வாழும் அறிவார்ந்த தமிழர்களை எளிதாகச் சென்று சேர்ந்தது.

உச்சக்கட்டமாக 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு பிரச்னையை ஒட்டி எழுந்த களேபரத்தில், மூணாறு நகரில் தேவிகுளம் பீரிமேடு தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்கச் சொல்லி நடத்தப்பட்ட ஒரு ஊர்வலத்திற்கு பின்னரே அன்வர் பாலசிங்கத்தை கேரள உளவுத்துறை தினமும் கண்காணிக்கத் தொடங்கியது.

மூணாறில் நடந்த ஊர்வல காணொளி காட்சிகள் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டதற்கு காரணம் அன்வர் பாலசிங்கம் என்று நம்பியது கேரளா உளவுத்துறை. 2012 ஆம் ஆண்டு தேனி நகரத்தில் இன்றைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வெளியிடப்பட்ட இழந்த நிலம் என்கிற ஆவணப்படம், கேரள அரசுக்கு எதிரானவர் அன்வர்பாலசிங்கம் என்ற ஒட்டுமொத்த கேரள போலீசாரும் முடிவுக்கு வந்தனர்.

அதற்குப் பின்னால் கடந்த 2015 ஆம் ஆண்டு டாட்டா தேயிலை கம்பெனிக்கு எதிராக எழுந்த வீரியமிகுந்த போராட்டத்தின் பின்னணியில் அன்வர்பாலசிங்கம் இருப்பதாக ஒட்டுமொத்த மலையாள ஊடக உலகமும் அறிவிப்புச் செய்தது.

அப்போது அன்வர் பாலசிங்கத்தை ஒரு இலங்கைக்காரன் என்றும் எல் டி டி இ க்காரன் என்றும் குற்றம் சாட்டினார், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு வின் தலைவராக இருந்த ஆலத்தனவட்டம் ஆனந்தன். (இவர் இரண்டு நாட்களுக்கு முன் தான் மரணித்தார்).

அதன் பின்னர் பெட்டி முடி நிலச்சரிவின்போது அன்வர் பாலசிங்கம் வெளியிட்ட காணொளியின் மீது குற்றஞ்சாட்டிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, அன்வர் மீது புகார் செய்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்ய வைத்தது.

அன்வர்பாலசிங்கம், ‘‘நான் என்னுடைய தாய் நிலத்திற்காகவும் ,என்னுடைய தாய் மொழியை பேசிய என் தமிழ் மக்களுக்காகவும் போராடினேனே தவிர, மலையாள மக்களுக்கு எதிராக எப்போதும் நின்றதில்லை. உரிமை மறுக்கப்படும் போது காற்று வெற்றிடத்தை நிரப்பாது என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அந்த களத்திற்கு வந்திருந்தேனே தவிர, எந்தவித ஆயுதம் தாங்கிய போராட்டத்திலும் நான் எப்போதும் இறங்கியதில்லை.

தமிழ் தத்துவ மரபு விட்டிச்சென்றிருக்கும் தத்துவார்த்த அடிப்படையில் என்னுடைய போராட்டங்கள் அமைந்திருக்கிறதே தவிர, தீவிரவாதத்தின் பக்கம் என் பார்வை எப்போதும் திரும்பியதில்லை. எப்போதும் திரும்பப் போவதும் இல்லை’’ என கொடுத்த விளக்கமும் பலன் தரவில்லை.

பொதுவாக அன்வர் பாலசிங்கம் என்றாலே தமிழ்த் தீவிரவாதி என்கிற நிலையை கேரள காவல்துறையிடம் இருந்து வந்தது. குறிப்பிட்ட சில நபர்கள் திட்டமிட்டு சதி செய்து கொண்டு சேர்த்ததின் காரணமாக, தற்போது வரை அழிக்க முடியாத பட்டமாக தமிழ்தீவிரவாதி பட்டம் அன்வர்பாலசிங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

ஆனால் நேற்று முன்தினம் அன்வர்பாலசிங்கத்தின் வாழ்வில் ஒரு புது திருப்பம் நிகழ்ந்த நாள். தமிழ் தீவிரவாதி என்ற அந்தப் பட்டத்தில் இருந்து அன்வர்பாலசிங்கம் விடுவிக்கப்பட்டு விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இது குறித்து அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் இடுக்கி மாவட்ட special branch DSP சந்தோஷ் இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவில் வைத்து எனக்கு அறிமுகமானார். அந்த அறிமுகம் அடுத்த கட்டத்தை நோக்கி என்னை நகரத்தியது.

நேற்று முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள special branch DSP சந்தோஷை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசினேன். அவர் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நம்முடைய அன்வர் பாலசிங்கம் வந்திருக்கிறார். உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னதும், மாலை 5 மணிக்குள் இடுக்கியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அன்வரை வரச் சொல்லுங்கள் என்று எஸ்.பி., அப்பாயிண்மென்ட் கொடுத்தார்.

சரியாக மாலை 5 மணிக்கு இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குரியாகோஸை சந்தித்தேன். இடுக்கி எஸ்.பி., மிகுந்த அன்புடன் கை கொடுத்து வரவேற்றார். அவரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் நடைமுறையில் நானும், எங்கள் சங்கமும், அதாவது பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பற்றி விவரித்தேன்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அந்த சந்திப்பின் போது உடனிருந்த, Idukki district special branch DSP மதுபாபுவிடமும் அறிமுகமாகி கொண்டேன். இடுக்கி மாவட்டத்தில் என்ன பிரச்சனை என்றாலும் நேரடியாகவே நீங்கள் என்னிடம் புகார் அளிக்கலாம். தவறு யார் செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்று எனக்கு உறுதி அளித்த இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குரியாகோஸ் ஐ.பி.எஸ்க்கு என் சார்பிலும், எங்கள் சங்கத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இனி இடுக்கி மாவட்டத்தில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ அல்லது தினசரி ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வரும் தமிழர்களுக்கோ என்ன பாதிப்பு என்றாலும் ,நேரடியாக இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் நேரடியாகவே புகார் அளிக்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இடுக்கி மாவட்டத்தில் தவறுதலாக என் மீது பூசப்பட்டிருந்த அத்தனை விஷம பிரச்சாரங்களையும் முறியடித்து, இனி எவ்வித நெருக்கடியும் இன்றி இடுக்கி மாவட்டத்திற்குள் சென்று வருவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் டிஎஸ்பிக்களுக்கும்,கேரள உளவுத்துறையினருக்கும் மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

உங்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே very honest என்று இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்னிடம் சொன்னதை கோடியில் ஒரு வார்த்தையாக நான் நினைக்கிறேன். அந்தப் பெருமை எங்கள் தமிழக முதல்வருக்கு தெரிய வந்ததால் தான், இந்த ஆண்டின் சிறந்த காவல் கண்காணிப்பாளருக்கான விருதை எங்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன தான் கேரள அதிகாரிகளோடும், இடுக்கி மாவட்ட மக்களோடும் நட்பு கொண்டிருந்தாலும் முல்லைப் பெரியாறு அணை என்று வந்து விட்டால் நான் எப்போதும் நேசிக்கும் என் 5 மாவட்ட மக்களோடு நிற்பேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil