போதைக்கு எதிராக விழிப்புணர்வு போட்டி: வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

போதைக்கு எதிராக விழிப்புணர்வு போட்டி:  வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
X

தேனி என்.எஸ்., கல்லுாரியில் நடந்த விழாவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சஜீவனா பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்களை தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன்-26 ஆம் நாள் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து போதைப் பழக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும், அவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்குவதற்காகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊக்க பேச்சாளர் ஐ.ஜெகன் மாணவர்களுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பழக்கத்திருந்து விடுபடுவது குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற விழிப்புணர்வு கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னர் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளம்பர வாசகப்போட்டி, விழிப்புணர்வு ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 566 மாணவர்களுக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் சஜீவனா, எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் வழங்கினர்.

தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன், சுகுமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பார்த்திபன், பெரியசாமி, ராமலிங்கம், கீதாராணி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை பொது செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தேனி-அல்லிநகரம் அரசுப்பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் ஆட்சியர் சஜீவனா பங்கேற்றார்.

Tags

Next Story