அண்ணாமலையின் பட்டியல் உளவுத்துறைகள் ‘விறுவிறு’
பா.ஜ., மருத்துவ அணி டாக்டர் பாஸ்கரன்.
கடந்த ஏப்.,14ம் தேதி பா.ஜ., தலைவர் அண்ணாமலை தி.மு.க., முக்கிய பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை வெளியிட்டார். இன்னும் இது போன்ற நான்கு பட்டியல்கள் வெளியாக உள்ளது. இதில் இதுவரை தமிழகத்தை ஆண்ட அத்தனை கட்சிகளின் ஊழல் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்கள் இருக்கும் எனவும் (அ.தி.மு.க.,வை மறைமுகமாக குறிப்பிட்டு) அண்ணாமலை ‘பகீர்’ கிளப்பி உள்ளார்.
அண்ணாமலை பட்டியல் வெளியிட்டு நான்கு நாட்கள் ஆகியும் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டது போன்ற ஒரு பிம்பம் உருவாகவில்லை. அதேசமயம் தி.மு.க.,வும் இந்த குற்றச்சாட்டை மிகவும் நிதானமாக எதிர்கொண்டு வருகிறது. தி.மு.க., தலைவர்கள் யாரும் இது பற்றி கருத்து தெரிவிக்கவும் இல்லை. கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவும் இல்லை.
இந்நிலையில் இந்த பட்டியல் தொடர்பாகவும், இனிமேல் வெளிவரும் பட்டியல்கள் தொடர்பாகவும் மக்கள் என்ன நினைக்கின்றனர். அண்ணாமலை ஏவியுள்ள அஸ்திரம் தி.மு.க.,விற்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறைகள் ‘விறுவிறு’வென சர்வே நடத்தி வருகின்றன. இது தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த பட்டியல் தொடர்பாக அண்ணாமலை அறிவித்தது போல், டீக்கடைகளிலும், பொதுவெளியிலும் மக்கள் மத்தியில் எந்த விவாதமும் நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்கள் இதனை கவனமாக கவனிக்கின்றனர். அதேநேரம் வெளிப்படையாக பேசத்தயங்குகின்றனர். நாம் ஏன் வீண் வம்பு வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஒதுங்க தொடங்கி உள்ளனர். இது பா.ஜ.,விற்கு சற்று அதிர்ச்சியாகத் தான் உள்ளது. மக்கள் ஊழல் விஷயங்களை வெளிப்படையாக விவாதிப்பார்கள் என பா.ஜ., நினைத்தது நடக்கவில்லை. இந்நிலையில், பா.ஜ.,வினரே நேரடியாக களம் இறங்கி விவாதங்களை தொடங்கி உள்ளனர்.
மக்கள் கூடும் அத்தனை இடங்களிலும் பா.ஜ.,வினர் அண்ணாமலை பட்டியல் குறித்த விவரங்களை பேசத்தொடங்கி உள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட பா.ஜ., மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் குறித்து மக்கள் வெளிப்படையாக பேசவில்லை என்பதை ஏற்க முடியாது. மக்கள் முன்பை விட தற்போது அரசியல் விவரங்களை மிகவும் கூர்மையாக கவனிக்க தொடங்கி உள்ளனர். மக்கள் தங்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், பா.ஜ.,வின் ஐ.டி., விங்க் வெளியிடும் தகவல்களை அதிகவில் வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட அத்தனை சோஷியல் மீடியாவிலும் பகிர்கின்றனர்.
சிலர் நாம் ஏன் விவாதித்து தி.மு.க.,வினரை பகைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கலாம். அதற்காக அவர்கள் இந்த பட்டியலை ஒதுக்கி விட்டனர் என்பது அர்த்தமல்ல. அது போன்ற நபர்கள் தங்களுக்குள்ளே விவாதித்து வருகின்றனர். இது தொடர்பாக எங்கள் பா.ஜ., குழுவினர் பல இடங்களில் தகவல்கள் சேகரித்தனர். நானும் பல அடுக்கு மக்களிடம் இது பற்றி பேசினேன். மக்கள் மத்தியில் அண்ணாமலை எடுத்த அஸ்திரம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அடுத்தடுத்த பட்டியல் வெளியாகும் போதும், அண்ணாமலை நடைபயணம் தொடங்கும் போதும் இன்னும் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கும். தவிர மிகப்பெரிய மவுனப்புரட்சி தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது. இதனை வரும் தேர்தல்களி்ல் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu