தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும்? அண்ணாமலை தேனியில் பகீர்...!

தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும்?  அண்ணாமலை தேனியில் பகீர்...!
X

தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை.

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க டி.டி.வி., தினகரன் தலைமையில் வலுவான அரசியல் இயக்கமாக மாறும்.

தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், டி.டி.வி., தினகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்த பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தேனி தொகுதியில் செல்லுமிடமெங்கும், பொதுமக்கள் அளித்த எழுச்சி மிகுந்த வரவேற்பு, டி,டி.வி., தினகரனின் வெற்றி உறுதி என்பதை எடுத்துக் காட்டியது. ஏற்கனவே தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள், மீண்டும் அவரையே பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். டி.டி.வி., தினகரன் மீண்டும் 16 ஆண்டுகள் கழித்து தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த முறை அவரை வரவேற்க மக்கள் முழு அளவில் தயாராகி விட்டனர். அவர் வெற்றி பெற்றதும் தமிழக அரசியல் களம் மாறும். அ.தி.மு.க., கட்சியே அவரது தலைமையின் கீழ் வரும். வரும் 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மாற்றத்திற்கு இந்த தேனி லோக்சபா தேர்தல் களம் அடித்தளம் அமைக்கும். தேனி தொகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர் அனைவரும் டி.டி.வி., தினகரனுக்கே ஓட்டளிப்பார்கள்.

நாடு முழுவதும், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணையாக, தமிழகத்தின் தேனி தொகுதியிலிருந்தும், டி.டி.வி., தினகரனை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் தேர்தல். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், 35 மாதங்களாக வெறும் விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை, தமிழக அரசியலை விட்டு அப்புறப்படுத்தவிருக்கும் தேர்தல்.

டி.டி.வி., தினகரன் வெற்றி பெற்றதும் எடப்பாடி தலைமையிலான அதிமுக காணாமல் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் டி.டி.வி.,க்கு எதிராக கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி., பக்கம் தான் என்பதை, ஜூன் 4 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.

பிரதமர் மோடியின் ஆட்சி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி போல விளம்பரம் தேவையில்லாத ஆட்சி. மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ. 174 ஆக இருந்த ஊதியத்தை, ரூ. 319 ஆக உயர்த்தி, மக்களுக்கு ரூ.60,000 கோடி நிதி, விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6,000 என இதுவரை ரூ.30,000, பல ஆயிரம் கோடி முத்ரா கடனுதவி என சாமானிய மக்கள், விவசாயிகள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவருக்குமான நல்லாட்சி நமது பாரதப் பிரதமர் அவர்களது ஆட்சி.

ஆனால், 2004 – 2014 திமுக காங்கிரஸ் பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு துரோகத்தைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் உயரத்தைக் குறைத்த துரோகம், கேரளாவில் இன்னொரு அணையைக் கட்ட அனுமதித்து செய்த துரோகம் என திமுக காங்கிரஸ் ஆட்சி செய்தவை பல. 2G ஊழல் வழக்கால் காங்கிரஸ் மிரட்டலுக்கு திமுக அமைதியாக இருந்து துரோகத்துக்குத் துணை போனது. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காங்கிரஸ் தடை செய்தது. நமது பிரதமர் மோடி தான் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுவதை உறுதி செய்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு, மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று கூறியது. திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, 35,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுக்க திமுக வந்தால், கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என்று மக்கள் கூற வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது நாட்டை வளமாக்க, வலுப்படுத்த, நமது பிரதமர் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்போது, அவற்றில், தேனியின் குரலும் ஒலிக்க, தேனி தொகுதி வளர்ச்சி பெற, டிடிவி தினகரனை குக்கர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!