மாநிலத்தில் முதன் முறையாக நடமாடும் இறைச்சிக்கடை : தேனியில் சுய தொழில் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாநிலத்தில் முதன் முறையாக நடமாடும் இறைச்சிக்கடை : தேனியில் சுய தொழில் செய்வோர்  எண்ணிக்கை அதிகரிப்பு
X

தேனி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் இறைச்சிக்கடை.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் வேலையிழந்தவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதால், சிறுதொழில் செய்வோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் வேலை வாயப்பினை இழந்தவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் நடமாடும் வியாபாரத்தையே தேர்வு செய்துள்ளனர். மாநிலத்தில் முதன் முறையாக நடமாடும் இறைச்சிக்கடைகள் கூட தேனி மாவட்டத்தில் அறிமுகம் ஆகி உள்ளன.

கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருபது மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இதனால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக பலநுாறு பேர் தங்களது வேலை வாய்ப்பினை இழந்தனர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக சுய வேலை வாய்ப்பினை தேர்வு செய்துள்ளனர். பெரும்பாலானோர் குறைந்த முதலீட்டில் வருவாய் ஈட்டும் நடமாடும் வியாபாரத்தையே தேர்வு செய்துள்ளனர்.

காய்கறிகள் முதல் இறைச்சி, பழங்கள், துணிகள் என இவர்கள் தொடாத வியாபாரமே இல்லை. மேக்ஸிகேப் வேன்கள் முதல் சரக்கு ஏற்றிச் செல்லும் சிறு வாகனங்கள் வரை இவர்கள் நடமாடும் வியாபாரத்திற்கு ஏற்ற சிறிய வாகனங்களை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். சிலர் வாடகைக்கு பிடித்துக் கொள்கின்றனர். மிகவும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்கள் சைக்கிள் அல்லது டூ வீலர் எடுத்து தெருத்தெருவாக சுற்றி இன்னும் சொல்லப்போனால் வீடு, வீடாக சென்று வியாபாரம் செய்கின்றனர்.

காய்கறிகள், பழங்கள், துணிகள், டீ, காபி, வடைகள், திண்பண்டங்கள், பலசரக்கு பொருட்கள், குடைகள், செருப்புகள், கவரிங் நகைகள், பேன்ஸி பொருட்கள் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வீடு தேடிச் சென்று வி ற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.

இதில் சிலர் சுவாராஸ்யமாக நடமாடும் இறைச்சிக் கடைகளையும் தொடங்கி உள்ளனர். பெண்கள், ஆண்கள் என சிலர் அவ்வப்போது மிகப்பெரிய வட்ட பாத்திரங்களில் மீன் போட்டு தலையில் சுமந்து தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்வது வழக்கம். தற்போது நடமாடும் தள்ளுவண்டியை இரும்பினால் செய்து, அதில் ஆடு, கோழி இறைச்சி வைத்து தெருத்தெருவாக சென்று விற்பனை செய்கின்றனர். இந்த புதிய வியாபாரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏதாவது ஒரு தெருவின் முக்கிய சந்திப்பில் நடமாடும் வாகனத்தில் நின்று கொண்டு இவர்கள் ஆடு அடித்து உறித்து அங்கேயே விற்பனை செய்கின்றனர். மக்களுக்கு கண்முன்னே பிரெஷ்ஷான ஆடு, கோழி இறைச்சி கிடைக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai as the future