மேகமலையில் மழைப்பொழிவு: வேகமாக நிரம்பும் வைகை அணை
வைகை அணை
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்று நள்ளிரவு வைகை அணை நீர் மட்டம் 68.50 அடியை எட்ட உள்ளதால், நள்ளிரவு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேகமலை வனப்பகுதியில் அதிக மழைப்பொழிவு உள்ளது. இதனால் வைகை ஆறு, சுருளியாறு, சண்முகாநதி, முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறுகளில் நீர் வரத்து அதிகம் உள்ளது. இந்த ஆறுகளில் வரும் தண்ணீர் முழுக்க வைகை அணைக்கே வந்து சேருகின்றன. தற்போது நீர் வரத்து அதிகரிப்பால் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
வைகை அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 71 அடி. ஆனால் அணை நீர் மட்டம் 66 அடியை எட்டிய உடனே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று வைகை அணைக்கு விநாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 769 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 68.35 அடியை எட்டி வருகிறது. இன்று நள்ளிரவு அணை நீர் மட்டம் 68.50 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்துள்ளது.
எனவே இன்று இந்த இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நள்ளிரவு விடப்படும். நீர் மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu