56 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தினரை சந்தித்த ஆந்திர பெண்

56 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தினரை சந்தித்த ஆந்திர பெண்
X

உறவினர்களுடன் கவுரி பார்வதி.

Meet The Family - பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி எட்டயபுரம் காதலனை கரம் பிடித்த பெண், தன் மகனின் உதவியுடன் 56 ஆண்டுகளுக்கு பின்னர் உறவினர்களை சந்தித்தார்.

Meet The Family -தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் (80). இவர், கடந்த 1960ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் நரசிப்பட்டினம் பகுதிக்கு டவர்லைன் அமைக்கும் பணிக்காக சென்றுள்ளார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கவுரி பார்வதி என்ற பெண்ணை காதலித்து உள்ளார்.

இவர்கள் காதல் விவகாரம், கவுரி பார்வதியின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அவர்கள் சாதி, மொழி உள்ளிட்டவற்றை காரணமாக காட்டி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் நம்மாழ்வாரும், கவுரி பார்வதியும் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறினர். விஜயவாடா நகரத்தில் கவுரி குடும்பத்தினர் அவர்களை பிடித்தது மட்டுமின்றி, நம்மாழ்வரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கவுரி, ''என்னை 10 நாட்களுக்குள் வந்து அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்'' என்று கூறியபடியே உறவினர்களுடன் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த நம்மாழ்வார், என்னசெய்தென்று தெரியாமல் திகைத்து போயுள்ளார். கவுரி பார்வதி சொன்ன வார்த்தைகள் தான் அவரின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் மறுபடியும் கவுரி வீட்டாரின் மிரட்டல்களை மீறியும் நரசிப்பட்டினம் சென்று யாருக்கும் தெரியாமல் அங்கேயே தங்கி, வேண்டப்பட்ட சில நபர்கள் மூலம் கவுரிக்கு தகவல் கொடுத்து நம்மாழ்வாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்திற்கு அழைத்து வந்த நம்மாழ்வார், 1966ம் ஆண்டு கவுரியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ஆந்திராவுக்கு செல்லாமல் நம்மாழ்வார் இங்கேயே வேலை பார்த்துக் கொண்டு கவுரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். தம்பதியினருக்கு அய்யம்மாள், சண்முகராஜ், முத்துலட்சுமி என 3 குழந்தைகள் உள்ளனர். ஆண்டுகள் செல்ல செல்ல கவுரிக்கு தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆந்திராவிற்கு சென்றால் கவுரி வீட்டார் இவர்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தால் அங்கு செல்லாமலே இருந்து வந்துள்ளனர்.

அவர்களும் நம்மாழ்வாரும், கவுரியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால் பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. தற்போது கவுரி பார்வதிக்கு 72 வயதாகிறது. இவர் அடிக்கடி தன் கணவர் மற்றும் மகனிடம் இறப்பதற்கு முன்பு ஒரு முறையாவது தன் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று கூறி அழுதுள்ளார். இதையடுத்து தனது தாயின் நீண்டநாள் ஏக்கத்தை போக்க வேண்டும் என்று முடிவு செய்த சண்முகராஜ் (49), தனது மகனை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் நரசிப்பட்டினம் கிராமத்திற்கு சென்று தாய் வழி உறவினர்களை தேடி உள்ளார்.

மொழி தெரியாத ஊரில் சுற்றித் திரிந்து அங்கிருந்தவர்களிடம் கவுரி பார்வதி பெயரைக் கூறி விசாரித்ததில் தன் சொந்தங்கள் ஒவ்வொருவரையாக கண்டுபிடித்தார். தாய்மாமன்கள், சித்தி, சித்தப்பா என அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு உங்களை நினைத்து தனது தாய் தினமும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும், உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்ற தன் தாயின் ஆசை பற்றியும் எடுத்துக் கூறி கவுரியை பார்க்க வரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் நாங்களும் பல ஆண்டுகளாக அவர்களை தேடினோம்.

ஆனால் அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால் நாங்களும் வருத்தத்தில் தான் உள்ளோம். உடனே வருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறுநாளே ஆந்திராவில் இருந்து கவுரி பார்வதியின் தம்பிகள், தங்கைகள், அவர்களின் குழந்தைகள், பேரன்கள் என 20க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் இருந்து மேலக்கரந்தைக்கு வந்துள்ளனர். இதனை ஒரு குடும்ப சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றிய சண்முகராஜன், இவரது சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் பல ஊர்களில் இருந்து வேன் பிடித்து வரவழைத்து வீட்டில் ஒரு விழாக்கோலத்தையே ஏற்பாடு செய்தார்.

16 வயதில் வீட்டை விட்டு வந்த கவுரியை 56 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த அவரது தம்பி, தங்கைகளும்... அதேபோல் சிறுபிள்ளைகளாக தனது தம்பி, தங்கையை பார்த்த கவுரி பார்வதியும் சொல்ல முடியாத தங்களின் உணர்வுகளை கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர். பின்னர் அனைத்து உறவுகளும் அறிமுகமாகிக் கொண்டு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்வுற்றனர். மேலும் அனைவரும் ஆனந்தமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
லேப்டாப் பேட்டரி எப்படி பாதுகாக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க | how to check battery health in laptop