தேனியில் அழிந்து வரும் தேசியப்பறவையை வனத்துறையினர் பாதுகாக்க கோரிக்கை

தேனி நகரமே மலைக்குன்றின் மேல் தான் அமைந்துள்ளது. தேனியை அடுத்த முல்லைப்பெரியாற்றினை ஒட்டி, தட்ஷிணாமூர்த்தி கோயிலுக்கு எதிரே உள்ள மலைக்குன்றுகளில் தேசியப்பறவையான மயில்கள் நுாற்றுகணக்கில் இருந்தன.
இந்த மயில்கள் இங்கு விளைவிக்கப்படும் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை உண்டு உயிர் வாழ்ந்து வந்தன. ஒரு பகுதியில் அறுவடை முடிந்தால், ஒட்டுமொத்த மயில் இனங்களும் பக்கத்தில் உள்ள குன்றுக்கு சென்று விடும். மயில் தானியங்களை உண்பதை விவசாயிகள் எப்போதும் பெரிய சுமையாக கருதுவதில்லை.
ஆனால் இப்போது உள்ள இளம் தலைமுறைக்கு இங்கு மயில்கள் வாழ்ந்த வரலாறே தெரியவில்லை. மயில்களா? இங்கு எப்ப இருந்தது? என்ற வினா எழுப்புகின்றனர். அந்த அளவுக்கு மயில் இனங்கள் அழிந்து விட்டன. இதற்கு தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்த விளைநிலங்கள் முழுக்க வீடாக மாறிப்போனது முக்கிய காரணம். இதனால் உணவு கிடைக்காமல் மயில்களும் அழிந்து விட்டன. மற்றொரு முக்கிய காரணம் வேட்டை. குடிமகன்களுக்கு உணவளிக்க இந்த மயில்களை சமூக விரோதிகள் வேட்டையாடி அழித்து விட்டனர். வழக்கம் போல் வனத்துறை ஆட்கள் பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி ஒதுங்கி விட்டது. இதனால் தேனியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல நுாறு எண்ணிக்கையில் வாழ்ந்து வந்த மயில் கூட்டத்தில் இருந்து தற்போது ஒரு மயிலைக்கூட காண்பது மிகவும் அரிதாகிவிட்டது என விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu