அசத்திய பாகிஸ்தான் நிருபர்... வியந்தது மீடியா உலகம் !

அசத்திய பாகிஸ்தான் நிருபர்... வியந்தது மீடியா உலகம் !
X

லைவ் நிகழ்ச்சியின் போது கடலில் குதித்து  சேனலுக்கு தகவல் கூறிய  நிருபர் அப்துல்ரஹ்மான் கான்.

‘பிபர்ஜோய்’ புயல் குறித்து பாகிஸ்தான் விஷூவல் மீடியா நிருபர் செய்தி சேகரித்த விதம் பத்திரிகை உலகின் பாராட்டை பெற்றுள்ளது

பொதுவாக உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை நிருபர்கள் தான் பல்வேறு தளங்களின் வழியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றனர். உள்ளூர் கலவரம், பேரிடர் சூழல் முதல், உலக தீவிரவாத தாக்குதல், போர் சூழல், இயற்கை பேரிடர், மழை, வெள்ளம், புயல், பூகம்பம், அரசியல் நிகழ்வுகள், கிரிமினல் நிகழ்வுகள் என எந்த தகவலாக இருந்தாலும் செய்திகளை மக்களுக்கு வழங்க நிருபர்கள் களத்தில் நிற்பார்கள்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் முடங்கிய நிலையிலும், அப்போது உலகின் சூழல் எப்படியிருந்தது என வெளியே வந்து உலக மக்களுக்கு தகவல் சொல்ல தன் உயிரை பணயம் வைத்த நிருபர்கள் ஏராளமாக உள்ளனர். அவ்வப்போது நிருபர்கள் எடுத்த ரிஸ்க்குகள் பற்றிய தகவல்களும் செய்தியாக வந்து கொண்டு தான் உள்ளன. இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘பிபர்ஜோய்’ புயல் குறித்து பாகிஸ்தான் நிருபர் ஒருவர், கடலில் குதித்து செய்திகளை வழங்கியது இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் கான் என்ற நிருபர், புயலால் கடல் நீர் அதிகரித்து விட்டதாக கூறி அது பற்றிய செய்திகளை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலின் ஆழம் குறித்து தெரியப்படுத்தும் வகையில் திடீரென கடலில் குதித்து விட்டார். பின்னர் நீந்தியபடியே கடல் ஆழம் குறித்து விவரித்த அவர், நீரில் மூழ்கி எழுந்து கராச்சி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் தைமுர் கானுடன், நிருபர் அப்துல் ரஹ்மான் கான் என தமது தகவல்களை சொல்லி முடித்தார். இந்த லைவ் டெலிகாஸ்ட் பாகிஸ்தான் மீடியாக்களில் மட்டுமின்றி, உலக அளவில் இணையதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நிருபர் அப்துல்ரஹ்மான் கான் மிகச்சிறந்த வானிலை செய்தியாளர் என குறிப்பிட்டு இந்த வீடியோவை பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனயாத் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் ‘ஆஸ்கர் லெவல் ரிப்போட்டிங்’ என்றும், ‘உண்மையாகவே நீங்கள் உங்கள் பணிகளில் மூழ்கும் போது’ சுவராஸ்யமான செய்திகள் கிடைக்கிறது என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags

Next Story