மேகமலையில் கேரள செய்தியாளர்கள்: பெரியாறு விவசாயிகள் கொந்தளிப்பு
அரிசிக் கொம்பன் யானை (பைல் படம்)
கேரள மீடியாக்கள் அரிசிக் கொம்பன் யானையை வைத்து வியாபாரம் செய்து வருகின்றன. அரிசிக் கொம்பன் யானை மட்டுமல்ல... எந்த யானையும் பசியோடு இருக்கும் போது ஆக்ரோஷமாகவே இருக்கும். அந்த ஆக்ரோஷம் தான் அரிசிக் கொம்பனுக்கும் இருந்துள்ளது. காரணம் இடுக்கி மாவட்டத்தில் யானைகளி்ன் வாழ்விடங்களை முழுக்க கேரள மாபியாக்கள் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் அரிசிக் கொம்பன் யானை, உணவுக்கு வேறு வழியின்றி மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் புகுந்து உணவுக்காக அலைந்தது.
அது போன்ற சூழ்நிலைகளில் அரிசிக் கொம்பனின் தாக்குதலில் சிக்கிய 16 தமிழர்கள் உட்பட 20 பேர் இறந்து விட்டனர். ஆக்கிரமித்தது வனமாபியாக்கள். ஆனால் அரிசிக் கொம்பனிடம் அடிவாங்கி இறந்தது அப்பாவி தொழிலாளர்கள். இந்த உண்மையை மறைத்த கேரள மீடியாக்கள் அரிசிக் கொம்பன் யானையை ஒரு கொலையாளி போல சித்தரித்து வருகின்றன.
இந்த நிலையில் கேரள மீடியாக்களின் தொல்லை தாங்காமல், கேரள வனத்துறை அரிசிக் கொம்பனை பிடித்து வந்து பெரியாறு புலிகள் வனப்பகுதியில் விட்டு விட்டனர். இதுவும் மிகப்பெரிய வனப்பரப்பு தான். ஆனால் அங்கிருந்து வனவிலங்குகள் எளிதில் தேனி மாவட்டம், மேகமலைக்கு வந்து விடும். மேகமலையில் இருந்து பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு சென்று விடும்.
அது போல் அரிசிக் கொம்பன் யானை மேகமலைக்குள் வந்து விட்டதாக கேரள மீடியாக்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. இதற்கு நேரடி ஒளிபரப்பு செய்ய சில முக்கிய பத்திரிக்கைகளின் செய்தியாளர்கள் தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு வந்து தங்கி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பவே முன்பு தங்கியவர்களை வெளியேற்றியது போல் ஒரு நாடகம் நடத்தி, வேறு நபர்களை தங்க வைத்துள்ளனர்.
இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அன்வர் பாலசிங்கம், சலேத்து உட்பட சிலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மேகமலைக்கு சென்றால் தடுக்கும் தமிழக வனத்துறை, கேரள பத்திரிக்கைகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது எப்படி? அவர்களை தங்க வைத்த தனியார் எஸ்டேட் உரிமையாளர்களை அனுமதித்தது எப்படி. தனியார் எஸ்டேட் முதலாளிகள் தைரியமாக இவ்வளவு முறைகேடுகளை நடத்த தேனி மாவட்ட வனத்துறை அனுமதித்தது எப்படி? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளனர்.
தவிர கேரளாவினை போல் மேகமலையிலும், வனக்குற்றவாளிகள், வன ஆக்கிரமிப்பு மாபியாக்கள் அரிசிக் கொம்பனிடம் இருந்து எளிதில் தப்பி விடுவார்கள். இங்குள்ள அப்பாவி தமிழ் தொழிலாளர்களே அரிசிக் கொம்பன் யானையிடம் சிக்கி அழிவார்கள். இந்நிலையில் தமிழ் தொழிலாளர்களை பாதுகாக்க அரிசிக் கொம்பனை தேக்கடி வனப்பகுதிக்குள் தமிழக வனத்துறை விரட்ட வேண்டும். இல்லையெனில் அரிசிக் கொம்பனை பிடித்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அனுப்ப வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அரிசிக் கொம்பனால் தமிழர்கள் பலியாக அனுமதிக்க கூடாது. இடுக்கி மாவட்ட வனப்பகுதிக்குள் அரிசிக் கொம்பனுக்கு எவ்வளவு இடையூறு இருந்ததோ அதனை விட அதிக இடையூறு மேகமலையில் இருக்கிறது. எனவே அரிசிக் கொம்பனின் கோபம் குறையாது. எனவே அரிசிக் கொம்பனை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அனுப்புவுதே இங்குள்ள தொழிலாளர்களை பாதுகாக்க ஒரே தீர்வாகும்.
இந்த நிலையில், மேகமலைக்குள் அத்துமீறி தங்கியிருக்கும் கேரள பத்திரிக்கையாளர்களை வெளியேற்ற வேண்டும். பெயர் விவரங்களையும், பத்திரிக்கை விவரங்களையும் சமூக வலைதளங்களி்ல் வெளியிட்டுள்ளனர். நாம் நாகரீகம் கருதி அதனை தவிர்த்துள்ளோம். தமிழ் பத்திரிக்கையாளர்கள் ஒருவர் குமுளியின் நகர் பகுதியில் இருந்து, நகர் பகுதியை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதிக்குள் ஒரு அடி கால் வைத்தாலும் கேரள வனத்துறை அவர்களை சின்னாபின்னம் செய்து விடும். ஆனால் தமிழக வனத்துறை சிவப்பு கம்பளம் விரிக்கிறது. கேரள பத்திரிக்கையாளர்களை வெளியேற்றாவிட்டால் மேகமலை புலிகள் காப்பக வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால் கேரள செய்தியாளர்களை தங்க வைத்திருக்கும் தனியார் எஸ்டேட்டை காலி செய்யச் சொல்லி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu