தேனி தீயணைப்புத்துறையில் நிலவும் கடுமையான அதிருப்தி..!
தீயணைப்புத்துறை (கோப்பு படம்)
தேனியில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது தேனி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது முதல் தீயணைப்புநிலையம், பெரியகுளம் ரோட்டோரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இடம் 23 சென்ட் வேறு ஒரு அரசுத்துறைக்கு சொந்தமானதாக இருந்தாலும், தீயணைப்புத்துறையின் அவசர அவசியம் கருதி இங்கு செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
ஆனால் இங்கு கட்டடம் கட்ட அனுமதிக்காததால், மிகவும் பாழடைந்த பழைய கட்டடத்தில் தான் தீயணைப்பு நிலையம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
மழை பெய்தால் ஒழுகும், ஆவணங்களை வைக்க இடம் இல்லை. ஊழியர்கள் அமர இடம் இல்லை. ஓய்வறை கூட இல்லை. இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இந்த இடத்தில் இருந்து விபத்து பகுதிக்கு செல்வது என்பது மிகவும் எளிதாக இருந்தது. இதனால் தீயணைப்புத்துறையின் மீட்பு பணிகள் விரைவாக நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த இடத்தை தீயணைப்புத்துறைக்கு வழங்கி, அங்கு 3 கோடி ரூபாயில் தீயணைப்பு நிலையம் கட்ட திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அரசு ஒண்ணரை ஏக்கர் இடத்தை தீயணைப்புத்துறைக்கு ஒதுக்கி உள்ளது. இங்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகம், தேனி தீயணைப்பு நிலைய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இடத்தில் இருந்து நகர் பகுதியை எட்டிப்பிடிக்க சாதாரண நேரத்தில் வேகமாக பயணித்தால் கூட 10 நிமிடம் தேவைப்படும். போக்குவரத்து நெரிசலோ, ரயில்வே கேட் சிக்கலோ வந்து விட்டால் இன்னும் அதிக நேரம் ஆகி விடும். தீ விபத்தோ, வேறு வாகன விபத்தோ நடந்தால் மின்னல் வேகத்தில் மீட்பு பணிக்கு வர வேண்டும்.
அதற்கு இந்த இடம் சரியாக இருக்காது. தற்போது உள்ள இடம் தான் வேண்டும் என தீயணைப்புத்துறை கேட்கிறது. இதனை மாவட்ட நிர்வாகமோ, அரசோ கண்டுகொள்ளவில்லை. இதனால் தீயணைப்புத்துறையினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இப்படி ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து நாங்கள் எப்படி விரைந்து மெயின் ரோட்டை பிடிக்க முடியும். யாரும் புரிந்து கொள்ளவில்லையே என புலம்பி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu