அல்லிஅம்மாள் நல்ல தண்ணீர் கிணற்றை மூட முயற்சி: இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு
இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர் அய்யப்பன்.
அல்லிநகரத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் அல்லிஅம்மாள் வெட்டிய நல்லதண்ணீர் கிணற்றினை துார்வாறி சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி இந்து எழுச்சி முன்னணியை சேர்ந்த எல்.ஆர்.அய்யப்பன் என்பவர் கூறியதாவது: தேனி அல்லிநகரம் உருவாகி பல நுாறு ஆண்டுகள் ஆகி வி்ட்டன. அல்லிநகரம் உருவான இந்த ஆரம்ப காலத்தில் இப்பகுதியை அல்லிஅம்மாள் என்பவர் ஆட்சி செய்தார். இவர் இங்குள்ள பெருமாள் கோயில் அருகில் கிணறு தோண்டினார். இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்று எடுத்து வந்தது.
அப்போது முதல் தற்போது வரை இந்த கிணற்று நீரை பொதுமக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேனி நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிணற்றுக்கு வழங்கிய மின் இணைப்பினை துண்டித்தது. அப்போது முதல் பொதுமக்கள் மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். கிணற்றினை துார்வாறி சீரமைத்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி நகராட்சி நிர்வாகம், தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் பல நுாறு முறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை இந்த கிணற்றினை துார்வாறி பராமரிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது இந்த கிணற்றை மூடுவதற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாக இப்படி கிணற்றினை மூடினால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அல்லிநகரம் பொதுமக்கள் கடுமையான போராட்டங்களை நடத்துவோம். வரலாற்று சிறப்பு மிக்க அல்லிஅம்மாள் கிணற்றினை பராமரிக்க வேண்டும்.
அதேபோல் அல்லிநகரத்தில் உள்ள சின்னக்குளம் கண்மாய் முழுதும் கழிவுநீர் தேங்கி கடுமையான சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இந்த கழிவுநீர் குளத்தில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இப்பகுதியில் கடுமையாக நோய் தொற்று பரவி வருகிறது. இந்த சின்னக்குளம் கண்மாயினை சுற்றி ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளன.
இந்த கண்மாயினை துார்வாறி சீரமைத்து, கரைகளை சுத்தம் செய்து பராமரித்தால், இந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டு வர பொதுமக்களுக்கும் பெரிய அளவில் வசதிகள் கிடைக்கும். அல்லிநகரத்தில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயும் இதே நிலையில் தான் உள்ளது. இந்த கண்மாயினை துார்வாறி சீரமைத்து படகு போக்குவரத்து விடுவதற்கு திட்டமிட்டு 20 ஆண்டுகளை கடந்தும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பொதுப்பணித்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தான் இப்பணியினை செய்ய வேண்டும்.
இது குறித்து தேனி ஆட்சியர், நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். தற்போது தலைவராக உள்ள ரேணுப்பிரியா பாலமுருகன் அல்லிநகரத்தை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு இந்த பகுதி மக்களின் மன உணர்வுகளும், இந்த மக்களின் வழிபாட்டு தன்மைகளும் நன்கு புரியும். அதேபோல் அல்லிஅம்மாள் கிணறு, அல்லிநகரம் சிறுகுளம் கண்மாய், மீறுசமுத்திரம் கண்மாய்களை பற்றிய முழு விவரங்களும் தெரியும். எனவே அவர் இந்த விஷயத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை மதித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu