ஆகாயத்தாமரைகளால் நிரம்பியுள்ள தேனி அல்லிநகரம் சின்னகண்மாய்
தேனி அல்லிநகரம் சின்னகண்மாய் பல ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் தேங்கும் கழிவுநீர் பாசன பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கண்மாய் நிரம்பினால் அல்லிநகரம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குறிப்பாக வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் இந்த கண்மாய்க்கே வந்து சேரும்.
இந்த கண்மாய் நிறைந்ததும் கூடுதல் நீர் மீறுசமுத்திரம் கண்மாய்க்கு வந்து சேரும். இந்த கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் தேனியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அல்லிநகரம் பொதுமக்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் கண்மாயினை சில ஆண்டுகளுக்கு முன்னர் துார்வாறினர்.
கண்மாயில் இருந்த பாலீதீன் பொருட்களை முழுமையாக அகற்றினர். கண்ணாடி பொருட்களை அகற்றி கண்மாயினை முழு அளவி்ல் சுத்தம் செய்தனர். கண்மாய் கரைகளை அகலப்படுத்தி சீரமைத்து மரக்கன்றுகள் நட்டனர். இங்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல தேவையான வசதிகளையும் உருவாக்கினர்.
இவ்வளவு செய்த பின்னரும் பொதுப்பணித்துறை தொடர்ந்து கண்மாயினை பராமரிக்கவில்லை. அல்லிநகரம் பகுதியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முழுவதையும் கண்மாய்க்குள் அதிகாரிகளே திருப்பி விட்டனர். தற்போது வரை கழிவுநீர் கண்மாய்க்குள் செல்கிறது. கண்மாய் பகுதியில் கழிப்பிட வசதிகள் இல்லாததால் கண்மாய் நீர் தேங்கும் பகுதியே உலர் கழிப்பிடமாக மாறியது. மரக்கன்றுகளை நீர் ஊற்றி பராமரிக்கவில்லை.
கண்மாய் மீண்டும் பராமரிப்பு இல்லாத நிலைக்கு சென்றதால், கண்மாயில் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையால் கண்மாயினை சுற்றிலும் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், டாக்டர்கள் பலலட்சம் செலவிட்டு சீரமைத்து கொடுத்த கண்மாயினை கூட அதிகாரிகள் தொடர்ந்து பராமரிக்காமல் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu