மாயமாகிப்போன பசுமைச்சாலைகள், தற்போது ஓரிரு இடங்களே மிச்சம்
சில காலங்களுக்கு முன்பு வரை மதுரையில் இருந்து வந்தாலும், திண்டுக்கல்லில் இருந்து வந்தாலும் தேனி மாவட்டத்திற்குள் நுழைந்த உடனே பசுமை தென்படத்தொடங்கி விடும். சில் என்ற காற்றும் வீசும். ரோட்டின் இருபுறமும் பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும் புளிய மரங்கள் வரவேற்கும்.
தேனி நகருக்குள் நுழையும் போதே இந்த புளிய மரநிழல்களால் பகலில் கூட சாலையே இருட்டு கட்டி காணப்படும். இதேபோல் பெரியகுளம் முதல் கம்பம் வரையும், தேனி முதல் கம்பம் வரையும், தேனி முதல் போடி வரையும் இப்படித்தான் இருக்கும்.
குறிப்பாக சீலையம்பட்டியில் இருந்து சின்னமனுார் செல்லும் வரை அடர்ந்து வளர்ந்து காணப்பட்ட காணப்பட்ட புளியமரங்களால் காட்டிற்குள் பயணிப்பது போன்ற ஒரு சுகமான பயணம் பயணிகளுக்கு கிடைத்தது. தவிர தேனி மாவட்டத்தில் கிராமச்சாலைகளிலும் இருபுறங்களிலும் மரங்கள் காணப்பட்டன.
ஆனால் இவை அனைத்துமே அந்த நாள் நினைவுகள் என்று ஆகி விட்டது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நான்கு வழிச்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஒன்றிய சாலைகள், நகராட்சி சாலைகள் என அனைத்து துறையினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சட்டமும் உத்தரவும் சாமான்ய மக்களுக்குத் தானே. அதனை அரசு அதிகாரிகள் மதிக்க வேண்டுமா என்ன? நீதிமன்ற உத்தரவை மதித்து இதுவரை ஒரு மரம் கூட நடப்படவில்லை. இது குறித்து யாரும் கேள்வியும் எழுப்பவில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்த பசுமைச்சாலைகள் அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டன.
தற்போது உத்தமபாளையம், பெரியகுளம், தாமரைக்குளம், கள்ளிப்பட்டி உட்பட சில இடங்களில் மட்டுமே ரோட்டோர புளியமரங்கள் எஞ்சியுள்ளன. இந்த மரங்களை பார்க்கும் மக்கள் மாவட்டம் முழுவதும் இது போல் இருந்ததே, மீண்டும் அந்த நிலை வராத என ஏக்கத்துடன் உள்ளனர். மீதமுள்ள இந்த மரங்களும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் விரைவில் அழிக்கப்படலாம். யார் கண்டது?
மரங்களை வெட்டுவதில் அக்கறை காட்டிய சம்மந்தப்பட்ட துறைகள், மரங்களை வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu