அணைகள் நிரம்பி வழிவதால் மீன்பிடிப்பதில் சிக்கல்

அணைகள் நிரம்பி வழிவதால் மீன்பிடிப்பதில் சிக்கல்
X

நீர் நிரம்பி ததும்பும் வைகை அணை.

தேனி மாவட்டத்தில் அத்தனை அணைகளும், கண்மாய்கள், குளங்களும் நிரம்பி வழிவதால், மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிகவும் நல்ல மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக வைகை அணை முழு கொள்ளவான 70 அடியை தாண்டி நிற்கிறது. 70 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டிருக்கும் போது, வைகை அணையில் இருந்து 18 கி.மீ., சுற்றளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இவ்வளவு தண்ணீர் தேங்கி நிற்கும் போது, உள்ளே மீன்பிடி படகுகள் இறங்கவே முடியாது. அணைப்பகுதியில் இருந்து மீன்பிடிக்க வாய்ப்பே இல்லை.

மாவட்டத்தில் அதிகளவு மீன் வைகை அணையில் தான் பிடிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகை அணையினை சுற்றி சில கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக படகுகளில் சென்று மீன் பிடித்து விற்கின்றனர். மாவட்டத்தில் இரண்டாவதாக அதிகளவில் மஞ்சளாறு அணையில் மீன்பிடிக்கப்படுகிறது. இந்த அணையும் முழுமையாக நிரம்பி உள்ளது. இங்கும் இவ்வளவு தண்ணீர் இருக்கும் நிலையில் மீன் பிடிப்பது சுலபம் இல்லை எனக்கூறுகின்றனர். இங்கும் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கண்மாய். கிட்டத்தட்ட அணைக்கு ஈடான ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கும் மேல் நீர் தேங்கி நிற்கும் இந்த கண்மாயிலும் நீர் நிரம்பி உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு, சுருளியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதி என அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே தேனி மாவட்டத்தில் கண்மாய் மீன், குளத்து மீன், ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்களின் விற்பனை சரிந்து போனது. கடல் மீன்கள் வரத்து ஓரளவு திருப்தியாக உள்ளது. பலத்த மழை காரணமாக ஆறு மற்றும் குளத்து மீன் பிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

வழக்கமாக தேனி மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மீன் ரகங்கள் விற்கப்படும். இதில் கண்மாய்கள், அணைகளில் வளரும் கட்லா மீன் விற்பனையே களை கட்டும். கட்லா மீன் பிரியர்கள் தேனி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளனர். இப்போது மழைக்காலம் என்பதால் கட்லா மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடல் மீன்கள் வருகையும் குறைந்துள்ளது. பக்கத்து மாவட்டமான திண்டுக்கல், இடுக்கி மாவட்டங்களில் இருந்து வரும் மீன்களின் அளவும் குறைந்துள்ளது. மீன் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஆகியவை மீன்பிரியர்களை வேதனைப்பட வைத்துள்ளது . இந்தச்சூழ்நிலையப் பயன்படுத்தி, மீன்களை பார்மலின் என்ற உடல் நலத்துக்குக்கேடு தரக்கூடிய வேதிப்பொருளைக் கொண்டு பதப்படுத்தி விற்கின்றனர். மாவட்ட உணவு கட்டுப்பாட்டுத்துறை இதனையும் ஆய்வு செய்து முழுமையாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!