பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் : எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்..!

பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் :  எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்..!
X

கோப்பு படம்


பொன்விழா கண்ட அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஒற்றைத் தலைமையாக அவர் உருவெடுத்த போது, வானகரம் பொதுக்குழுவில், “அம்மாவுக்குப் பிறகு எடப்பாடியால்தான் கட்சியை வழிநடத்த முடியும்” என்று அவருக்காக முழங்கிய தலைகளில் பலரும், இப்போது “நாம் நம் முடிவுகளைப் பரிசீலிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது. பிரிந்து சென்றவர்களெல்லாம் கட்சியில் மீண்டும் இணைந்தால் தான் கட்சிக்கு நல்லது” என எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை 8-ம் தேதி, எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க-வில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. “சேலம் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடியை ரவுண்டு கட்டியிருக்கிறார்கள் கட்சியின் ஆறு சீனியர் தலைகள். தன் கண்ணசைவுக்குக் காரியங்களை முடிக்கும் வேலுமணியும் தங்கமணியுமே தனது நிலைப்பாட்டுக்கு எதிராக நின்று பேசியதில், சற்று மிரண்டு தான் போயிருக்கிறார் எடப்பாடி” என்கின்றன இலைக் கட்சி வட்டாரங்கள்.

சேலத்தில் என்ன தான் நடந்தது... ‘இணைப்பு அவசியம்’ என்று சீனியர்கள் திடீரென வலியுறுத்துவது ஏன்..? விரிவாகவே பார்க்கலாம்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் கூறியதாவது: “ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த போது, கட்சியின் 95 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக நின்றோம். ஜூலை 11, 2022-ல் நடந்த பொதுக்குழுவில், அவரைப் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுத்தோம். ஒற்றைத் தலைமையின்கீழ், முதன் முதலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைக் கட்சி சந்தித்தது. ஆனால், வெற்றிபெற முடியவில்லை. ‘இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் பலத்தைக் காட்டும்’ என்பதால், அந்தத் தோல்வி கட்சிக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி அடைந்த தோல்வியைச் சுலபமாகக் கடந்து போய் விட முடியவில்லை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளில், 35 இடங்களில் இரட்டை இலைச் சின்னம் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் தென்சென்னை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது இரட்டை இலை. 1972-ல் கட்சி தொடங்கப்பட்ட காலம் தொட்டு, இப்படியொரு சரிவைச் சந்திக்காததால், தொண்டர்களெல்லாம் சோர்ந்து போய் விட்டனர். உறுப்பினர்களின் ஓட்டே முழுமையாக இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு விழவில்லை என்பது தான் உண்மை. ஆனால், சில புள்ளிவிவரங்களைக் காட்டி, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2024-ல் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, இன்னும் வேகமாகச் செயல்பட்டால் 2026-ல் ஆட்சியைப் பிடித்து விடலாம்’ என்று எடப்பாடி பூசி மெழுக ஆரம்பித்து விட்டார். தோல்வியிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

பொதுவெளியில், மேடைகளில் இப்படிப் பூசி மெழுகினால்கூடப் பரவாயில்லை. தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் அதையே சொல்லி அவர் சமாளிக்கவும் தான், சீனியர்கள் கடுப்பாகி விட்டனர். இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக, தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவெடுத்தார் எடப்பாடி. ஜூலை 10-ம் தேதி முதல் பத்து நாள்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எனத் தேதியும் குறிக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே சில விஷயங்களை எடப்பாடியுடன் கலந்து பேச சீனியர்கள் திட்டமிட்டனர். அதற்கான நாளும் வந்தது.

கடந்த ஜூலை 8-ம் தேதி, டெல்டா பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி, சேலம் ஓமலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. பின்னர், சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள எடப்பாடியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. சந்திப்புக்கு எடப்பாடியும் சம்மதிக்க, முதல்நாள் இரவே முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய ஆறு பேரும் கோவையில் கூடியிருக்கிறார்கள்.

‘எடப்பாடியுடன் என்ன பேச வேண்டும்... யார், எதைக் கூற வேண்டும்’ எனத் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியவர்கள், ஜூலை 8-ம் தேதி இரவு, சேலம் வீட்டில் குழுமினர். இரவு 9 மணிக்கு மேல் காரசாரமாக ஆரம்பித்தது ஆலோசனைக் கூட்டம்.

முதலில் நத்தம் விசுவநாதன்தான் பேசியிருக்கிறார். ‘கட்சியின் நலனுக்காகச் சிலவற்றைப் பேசித்தான் ஆகணும். இந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் ஓர் அபாய எச்சரிக்கையை விட்டிருக்கு. ‘கட்சி நாலு துண்டாப்போயிடுச்சு’ன்னு தொண்டர்களெல்லாம் சோர்ந்து போயிட்டாங்க. கிளைக் கழகச் செயலாளர்கள் பலரும் இந்தத் தேர்தல்ல வேலையே பார்க்கலை. தென்மாவட்டத்துல கட்சிக்கு பலத்த அடி விழுந்திருக்கு. இதையெல்லாம் சரிசெய்யணும்னா, கட்சியிலருந்து பிரிஞ்சு போனவங்களை மீண்டும் ஒருங்கிணைச்சு கட்சிக்குள்ள இணைக்கணும். ‘பிரிந்தவர்கள் ஒன்று சேர வாருங்கள்’னு ஒரு அறிக்கையை வெளியிடலாம்...’ என நத்தம் பேசி முடிப்பதற்குள், கண் சிவந்திருக்கிறார் எடப்பாடி.

‘பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கணும்னா, துரோகம் செஞ்சவங்களையும் கட்சிக்குள்ள சேர்க்கச் சொல்றீங்களா?’ என அவர் கடுகடுக்க, குறுக்கிட்ட சி.வி.சண்முகம், ‘அவர் என்ன சொல்றாருன்னு முதல்ல புரிஞ்சுக்கங்க. கட்சியோட நலனுக்காக சசிகலாவை வெளியேற்றினோம். ஆனா, ‘பதவி கொடுத்தவங்களையே ஏமாத்திட்டார் எடப்பாடி’ன்னுதான் பேச்சா இருக்கு. கட்சிக்கு எதிரா செயல்பட்டதால ஓ.பி.எஸ்-ஸையும் வெளியேற்றினோம்.

ஆனா, ‘முக்குலத்தோர் சமுதாயத்தையே ஓரங்கட்டுகிறார் எடப்பாடி’னு பேச்சு திரும்பிடுச்சு. 2021 சட்டமன்றத் தேர்தல்ல, சங்கரன்கோவில் தொகுதியில நம்ம வேட்பாளர் ராஜலட்சுமியை 5,000 வாக்குகள் வித்தியாசத்துல தான் தி.மு.க வேட்பாளர் ராஜா தோற்கடிச்சார். அந்தத் தொகுதி தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள்ள வருது. இந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல, இரட்டை இலையைவிட 24,400 வாக்குகள் கூடுதலா தி.மு.க அந்தத் தொகுதியில வாங்கியிருக்கு. தி.மு.க-வுக்கு விழுந்த வாக்குகளெல்லாம் நம்மோடதுன்னு உங்களுக்குப் புரியலையா... இந்த மாதிரிதான் எல்லாத் தொகுதியிலயும் நடந்திருக்கு. இதைச் சரி பண்ணணும்னா, கட்சியிலருந்து பிரிஞ்சவங்களை ஒருங்கிணைச்சாத்தாங்க கட்சி மீண்டும் உயிர்பெறும்’ என்று சண்முகம் படபடக்கவும், மேலும் எடப்பாடி டென்ஷன் ஆகியிருக்கிறார்.

‘கட்சியிலருந்து யாருங்க பிரிஞ்சது... பன்னீரோடவும் சசிகலாவோடவும் இப்ப யாரு இருக்காங்க... நம்ம கட்சி அலுவலகத்தை அடிச்சு ஒடைச்சவர் பன்னீரு. நமக்கெல்லாம் சசிகலா எவ்வளவு குடைச்சல் கொடுத்தாங்கன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். மறுபடியும் அவங்களை இணைக்கச் சொல்ற மாதிரியே பேசிக்கிட்டிருக்கீங்களே... பொதுக்குழுவுல முடிவெடுத்துத்தானே அவங்களை நீக்கினோம்?’ என டென்ஷனில் எடப்பாடி கத்த....

வேலுமணி குறுக்கிட்டிருக்கிறார். ‘அண்ணா, அவங்களைச் சேர்த்துக்கங்கன்னு சொல்ல நாங்க வரலை. ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றுபட வாருங்கள்’னு ஒரு அறிக்கைவிடணும்னு தான் சொல்றோம். நாம பெருந்தன்மையா நடந்துப்போம். இது தொண்டர்கள் மத்தியில பாசிட்டிவ்வா வேலை செய்யும். பொதுச் செயலாளரா உங்க தலைமையை ஏத்துக்கிட்டு வர்றவங்க வரட்டும். அடுத்த சி.எம் நீங்க தான். அதுக்கு நாங்க கேரன்டி தர்றோம். அது நடக்கணும்னா கட்சி ஒன்றுபட்டு பலத்தோட இருக்கணும்.

நாடாளுமன்றத் தேர்தல்ல நாம போட்ட பிளான் எதுவும் வொர்க்அவுட் ஆகலைன்னா, தென்மாவட்டத்துல, அஞ்சு தொகுதியில டெபாசிட் போயிடுச்சு. சுயேச்சை சின்னத்துல போட்டியிட்ட பன்னீர், ராமநாதபுரத்துல இரண்டாமிடம் வாங்கிட்டாரு. நம்மால டெபாசிட்கூட வாங்க முடியலை. கள யதார்த்தம் இதுதான். இதைப் புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க.

உங்க தலைமையை ஏத்துக்கிட்டு பன்னீரோ, சசிகலாவோ யார் வர்றதா இருந்தாலும் வரட்டும். 2026 ரொம்பவே டஃப்பா இருக்கும் போல. நம்ம பலமா இருந்து, கட்சி ஓட்டு சிந்தாம சிதறாம நமக்கு விழுந்தாத்தான் நாம நினைச்சது நடக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தல்ல, தென்மாவட்டத்துல இருக்குற 17 சட்டமன்றத் தொகுதியில 20,000 வாக்குகள் கூட நம்ம கட்சி வாங்கலை. இதே நிலை நீடிச்சதுன்னா, நம்மால ஆட்சியமைக்க முடியாது. கட்சி ஜெயிக்குறதும், காணாமல் போகுறதும் உங்க கையிலதான் இருக்கு. எல்லாரும் இணைஞ்சு செயல் பட்டாத்தான் எல்லாருக்கும் நல்லது. நீங்க தான் நல்ல முடிவா எடுக்கணும்’ என ஒரே போடாகப் போட்டிருக்கிறார். பக்கத்திலிருந்த தங்கமணியும் கே.பி.அன்பழகனும்... ‘கொங்கு மண்டலத்திலும், வட தமிழகத்திலும் ஜெயிச்சா மட்டும் போதாது. மொத்தமா ஜெயிச்சாத்தான் ஆட்சியமைக்க முடியும். அது உங்க கையிலதான் இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், ‘அம்மா மறைவுக்குப் பிறகு, நாம நினைச்ச மாதிரியே எல்லாமே நடந்தது. ஆட்சியை உண்மையாவே நல்லா நடத்துனீங்க. இல்லைன்னு சொல்லலை. ஆனா, இப்போ நிலைமை ரொம்பவே மாறியிருக்கு. இந்தச் சூழல்ல கட்சி நலனுக்காக நம்முடைய தனிப்பட்ட சுய விருப்பங்களை ஒத்திவெச்சுத்தான் ஆகணும். கட்சியோட நலனுக்காக, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கணும்னுதான் சொல்றோம். உள்ளாட்சித் தேர்தல் வரப்போவுது. இந்தச் சூழல்ல, ‘நம்ம கட்சி பிரிஞ்சுகிடக்கு’ன்னு தொண்டர்கள் மத்தியில ஒரு கருத்தும் நினைப்பும் இருந்தா, யாரும் வேலை பார்க்க மாட்டாங்க. அதனால, ஒரு அறிக்கையை வெளியிடுங்கன்னுதான் சொல்றோம்.

வர்றவங்க வரட்டும். நாம தலைமையில இருந்த காலகட்டத்துல கட்சியை அழியவிட்டதா வரலாறு உருவாகிடக் கூடாது... நல்ல முடிவா எடுங்க’ என அழுத்தமாகவே பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அதன் பிறகும்கூட தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை எடப்பாடி. ‘எனக்கு இதுலல்லாம் உடன்பாடு இல்லைங்க. கட்சிக்கு துரோகம் செஞ்சுட்டுப் போனவங்களை மீண்டும் இணைச்சுக்க விரும்பலை’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லியிருக்கிறார்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிரிந்தவர் இணைப்பு மட்டுமல்லாமல் தலைநகருக்கு வராமல், சேலத்திலேயே இருந்து அரசியல் செய்வது, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தலைமையிடமிருந்து தருவதாகச் சொன்ன நிதியை விடுவிக்காமல் இருந்தது, சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு மட்டும் ஸ்வீட் பாக்ஸுகள் வழங்கியது, பா.ஜ.க மீதான விமர்சனத்தைத் தவிர்ப்பது எனப் பல விஷயங்களும் காரசாரமாகப் பேசப்பட்டிருக்கின்றன. இது எதற்கும் எடப்பாடியிடம் உரிய பதிலில்லை. இறுதியாக, ‘யோசிச்சு சொல்லுங்க. மீண்டும் பேச வர்றோம்...’ என்றபடி அந்த ஆறு சீனியர் தலைகளும் கிளம்பியிருக்கிறார்கள்.

சமீபகாலமாக, பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்துக் கட்சிக்குள் பரவலாகப் பேச்சு எழுந்திருக்கிறது. ‘டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்துகிறார். அவரை அ.தி.மு.க-வுக்குள் சேர்க்க முடியாது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸையும் சசிகலாவையும் கட்சிக்குள் கொண்டு வரலாம். அதன் மூலமாக, தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்திடம் எழுந்திருக்கும் அதிருப்தி மனநிலையைச் சரிக்கட்டலாம்’ என்பதே தென்மாவட்ட நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது.

அந்த எண்ணத்தை, கவுண்டர், வன்னியர், முக்குலத்தோர் எனப் பலதரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைகளும் ஒன்று சேர்ந்து எடப்பாடியிடம் முதன்முறையாகக் கொண்டு போயிருக்கிறார்கள். இதுநாள் வரையில், தன் கருத்துக்கு எதிர்க்கருத்து பேசாதவர்கள்கூட சரிக்குச் சமமாக வாதாடுவதால், சற்று மிரண்டுதான் போயிருக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்தால், எடப்பாடிக்கு நிச்சயமாக நெருக்கடி வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான அமைப்புச் செயலாளர்கள் சிலர். நம்மிடம் பேசிய அவர்கள், “சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தான் அவர் குறியாக இருப்பார். அவரைப் பின்தொடர்ந்து பன்னீர், தினகரன், மன்னார்குடிக் குடும்பம் என எல்லாருமே கட்சிக்குள் வந்து விடுவார்கள். பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி இருந்தாலும், இப்போது இருப்பதுபோல அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. எந்த நேரமும் பதற்றத்திலேயே இருக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவரது அதிகாரம் பறிபோகும். ஒருநாள், மொத்தமாக எடப்பாடியை வெளியே தள்ளி கட்சியைக் கபளீகரம் செய்து விடுவார்கள்.

சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரனை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது பா.ஜ.க-வின் அஜண்டா. அதை ஏன் அ.தி.மு.க சீனியர்கள் முன்னெடுக்கிறார்கள் என்பதுதான் எடப்பாடிக்குப் புரியாத புதிராக இருக்கிறது. சிலர் திடீரெனக் குரல் உயர்த்துவது குறித்துச் சந்தேகமாக இருக்கிறது. சேலம் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு சில நாள்கள் முன்னதாக, மணியான இரண்டு முன்னாள் அமைச்சர்கள் பெங்களூருக்குப் பயணமாகியிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ஒருவரின் அறிவுத்தலின்படி, பெங்களூரில் சிலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு தான் சேலம் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பா.ஜ.க-வின் அஜண்டாவைக் கட்சிக்குள் சிலர் அமல்படுத்த முயல்வது போல இருக்கிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வின் தாக்கம் எதுவுமே இல்லை. ஓ.பி.எஸ்-ஸும் தோற்றுப்போய் நிர்கதியாக நிற்கிறார். அவருக்குப் பின்னால் இருக்கும் சிலரையும் இழுத்து விட்டால், அவரே காணாமல் போய் விடுவார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என இரட்டைத் தலைமையின் கீழ் இருந்த போது தான் ஏழு தோல்விகளைச் சந்தித்தது கட்சி.

அந்தத் தோல்விகளுக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல மொத்தப் பழியையும் எடப்பாடி மீது போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் பன்னீர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர், கூட்டணி என எதுவுமே இல்லாமல் 20.46 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். ‘இது கட்சிக்கு வளர்ச்சிதான்’ என்று திடமாக நம்புகிறார் எடப்பாடி. அதனால்தான், ‘கட்சியை வலுப்படுத்தினால் போதும். ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று பேசுகிறார். இது சில சீனியர்களுக்குப் புரியவில்லை. அவர்கள், யாரின் தூண்டுதலில் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்து அறிய சில முக்கியப் புள்ளிகளைக் களமிறக்கியிருக்கிறார் எடப்பாடி” என்றனர்.

“அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தான் நிர்வாகிகளாக நீடிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரையில் அதுவே எழுதப்படாத சட்டமாக இருந்தது. முதன்முறையாக அந்தச் சட்டத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. திடீரென ‘நீங்க செய்யுறது தப்புங்க...’ எனக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் ஆறு சீனியர் தலைகள். தனது இரு கரங்களாகக் கருதிய வேலுமணியும் தங்கமணியுமே அந்தக் கிளர்ச்சியில் முன்வரிசையில் இருப்பதால், இந்த முறை மிரண்டு தான் போயிருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் இலைக் கட்சியின் சீனியர் புள்ளிகள்.

புகைந்து எழும் இந்த எதிர்க்குரல்களைச் சரியாகக் கையாளவில்லையெனில், அணைக்க முடியாத பெரு நெருப்பாக அது மாறலாம். எடப்பாடி இனி நிம்மதியாகத் தூங்க முடியாது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா